அரக்கோணம்-தக்கோலம் ரெயில் பாதையில் பராமரிப்பு பணி: வருகிற 5 முதல் 14-ந் தேதி வரை ரெயில் சேவை ரத்து
அரக்கோணம்- தக்கோலம் ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வருகிற 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சூரமங்கலம்,
இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரக்கோணம்-தக்கோலம் ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி திருவனந்தபுரம்-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22208) வருகிற 7 மற்றும் 10-ந் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் மறு மார்க்கத்தில் சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22207) வருகிற 5 மற்றும் 9-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்னை-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை வருகிற 11 முதல் 14-ந் தேதி வரை 4 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் கோவை- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் அதே நாட்களில் ரத்து செய்யப்படுகிறது.
கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 4-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை காட்பாடியில் நிற்காது. அதேபோல் திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 6 மற்றும் 13-ந் தேதி ஆகிய 2 நாட்கள் ஜோலார்பேட்டையில் நிற்காது. மேலும், மங்களூரு-சென்னை ரெயில் வருகிற 4-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சித்தேரியிலும், 13-ந் தேதி ஜோலார்பேட்டையிலும் நிற்காது.
சென்னை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை-காட்பாடி வரை 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன்பிறகு அந்த ரெயில் காட்பாடியில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும். சென்னை-திருவனந்தபுரம் அதிவிரைவு ரெயில், சென்னை-ஜோலார்பேட்டை வரை வருகிற 7 மற்றும் 14-ந் தேதி ஆகிய நாட்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன்பிறகு ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
சென்னை-மங்களூரு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை-ஜோலார்பேட்டை இடையே ஏப்ரல் 14-ந் தேதி பகுதியாக நிறுத்தி வைக்கப்படுகிறது. மாறாக ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
அதேபோல், ஜெய்ப்பூர்-கோவை ரெயில் வருகிற 9-ந் தேதியும், பிலாசபூர்-எர்ணாகுளம் ரெயில் 8-ந் தேதியும், மங்களூரு-கச்சிகுடா ரெயில் 6-ந் தேதியும், மும்பை-நாகர்கோவில் ரெயில் 13-ந் தேதியும், நாகர்கோவில்-சென்னை ரெயில் 7-ந் தேதியும், மதுரை-சென்னை ரெயில் 11-ந் தேதியும், கொல்லம்-விசாகப்பட்டினம் ரெயில் 5-ந் தேதியும், பிலாசபூர்-திருநெல்வேலி ரெயில் 9-ந் தேதியும், எர்ணாகுளம்-ஹவுரா ரெயில் 9-ந் தேதியும் என இந்த ரெயில்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன.
சென்னை-பெங்களூரு ரெயில் வருகிற 5-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மதியம் 12.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலதாமதமாக 1.20 மணிக்கு புறப்பட்டு செல்லும். சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 14-ந் தேதி மாலை 3.25 மணிக்கு பதிலாக இரவு 7.25 மணிக்கு தாமதமாக புறப்பட்டு செல்லும். சென்னை-மங்களூரு ரெயில் வருகிற 14-ந் தேதி மாலை 5 மணிக்கு பதிலாக இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story