வாலிபர் பலி எதிரொலி: 70 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மத்திய அரசு நிதி கிடைக்காததால் பணி பாதிப்பு


வாலிபர் பலி எதிரொலி: 70 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மத்திய அரசு நிதி கிடைக்காததால் பணி பாதிப்பு
x
தினத்தந்தி 31 March 2019 3:00 AM IST (Updated: 31 March 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் வெறிநாய் கடித்து வாலிபர் இறந்ததால், 70 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதேநேரம் மத்திய அரசின் நிதிஉதவி கிடைக்காததால் கருத்தடை சிகிச்சை பணி பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் நகரில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதில் சில வெறிநாய்களும் சுற்றித்திரிவதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி, சவேரியார்பாளையத்தை சேர்ந்த வெஸ்டியன் (வயது 21) என்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது. அதன்படி பிராணிகள் நலச்சங்கத்தினர் திண்டுக்கல் நகரில் கடந்த சில நாட்களாக தெருநாய்களை பிடித்து சென்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 70 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

மேலும் கருத்தடை செய்த நாய்களுக்கு வெறிநோய் வராமல் இருக்க தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கு மத்திய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிதிஉதவி வழங்கப்படுகிறது. அந்த தொகை முழுமையாக கிடைக்காததால், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிராணிகள் நலச்சங்க செயலாளர் ரமேஷ் கூறியதாவது:-

திண்டுக்கல் நகரில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன. அதில் சுமார் 4 ஆயிரம் நாய்கள் கருத்தடை செய்யப்படாதவை ஆகும். கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும் நாயை 3 நாட்கள் பராமரிப்பில் வைத்து மீண்டும் அதே இடத்தில் விடுகிறோம். இதற்கு ஒரு நாய்க்கு ரூ.1,287 செலவாகிறது. ஆனால், மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.350-ம், மாநகராட்சியின் பங்களிப்பாக ரூ.350-ம் என மொத்தம் ரூ.700 வழங்கப்படுகிறது. இதில் கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசின் பங்களிப்பு தொகை முறையாக கிடைப்பதில்லை. அந்த வகையில் ரூ.3 லட்சத்து 89 ஆயிரம் வரவேண்டியது இருக்கிறது. இதனால் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, மத்திய அரசு பங்களிப்பு தொகையை விரைவாக வழங்க வேண்டும். அதேபோல் தெருநாய்கள் பெருகுவதை தடுக்க கருத்தடை அறுவை சிகிச்சைக்கு தன்னார்வலர்கள் உதவலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story