கொடைக்கானலில் சுற்றுலா தலமான ‘கோக்கர்ஸ்வாக்’ பகுதியில் காட்டுத்தீ
கொடைக்கானலில், சுற்றுலா தலமான ‘கோக்கர்ஸ் வாக்’ பகுதியில் பயங்கர தீ ஏற்பட்டது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதி மற்றும் தனியார் பட்டா நிலங்களில் புதர்கள், செடிகள், மரங்கள் காய்ந்து வருவதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இந் நிலையில் நகரின் அருகில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான ‘கோக்கர்ஸ்வாக்’ அருகே உள்ள பட்டா நிலங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென காட்டுத் தீப்பிடித்தது.
இந்த தீ அருகில் உள்ள வருவாய் நிலங்கள், வனப்பகுதிகளுக்கும் பரவியது. இதனால் தீ பற்றி எரிந்ததால் நகர் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறை ஊழியர்களும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காற்றின் வேகம் காரணமாக தீயை அணைக்க முடியவில்லை. சுமார் 15 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இருந்தபோதிலும் வனப்பகுதி மற்றும் தனியார் பட்டா நிலங்களில் இருந்த சவுக்கு, குங்கிலிய மரங்கள் தீயில் எரிந்து நாசமாயின.
கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து வனப்பகுதி மற்றும் தனியார் பட்டா நிலங்களில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க கூடுதல் தீயணைப்பு வீரர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story