திருச்சியில் ‘தினத்தந்தி’ கல்வி கண்காட்சி தொடங்கியது மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்


திருச்சியில் ‘தினத்தந்தி’ கல்வி கண்காட்சி தொடங்கியது மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 31 March 2019 4:00 AM IST (Updated: 31 March 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ‘தினத்தந்தி’ கல்வி கண்காட்சி தொடங்கியது. இதனை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

திருச்சி,

பிளஸ்-2 முடித்த பிறகு உயர்கல்வி படிப்பது என்பது மாணவ-மாணவிகளுக்கு முக்கியமானதாகும். மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் உயர்கல்வி தான் அவர்களது வாழ்க்கையை தீர்மானிக்கும். இதனால் உயர்கல்வியில் எந்த பிரிவை தேர்ந்தெடுப்பது? எங்கு படிப்பது? எப்படி படிப்பது? என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் மாணவ-மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோருக்கும் இருக்கும்.

இந்த சிரமத்தை போக்குவதற்காக உயர்கல்வி தொடர்பான அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் மாணவ-மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் ‘தினத்தந்தி’ சார்பில் ஆண்டு தோறும் கல்வி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ‘தினத்தந்தி’- சென்னை ராமாபுரம் வளாக எஸ்.ஆர்.எம். கல்வி குழுமங்கள் இணைத்து நடத்தும் கல்வி கண்காட்சி திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே தாஜ் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது.

இந்த கண்காட்சியின் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவில் திருச்சி எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் செயல் இயக்குனர் டாக்டர் ரகுபதி ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறந்து வைத்தார். தொடர்ந்து அவரும், கரூர் எம்.குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரி செயலாளர் கே.ராமகிருஷ்ணன், திருச்சி இந்திரா கணேசன் கல்வி குழுமங்களின் இயக்குனர் பாலகிருஷ்ணன், இலுப்பூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி கணினி அறிவியல் துறை தலைவர் சுபாஷ், திருச்சி ‘தினத்தந்தி’ மேலாளர் எஸ்.ஆர்.சிவசுப்பிரமணியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள்.

கண்காட்சியில் மருத்துவம், என்ஜினீயரிங், விவசாயம், கலை மற்றும் அறிவியல், கேட்டரிங் உள்பட பல்வேறு துறைகளின் உயர்கல்வி குறித்து 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அரங்குகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. மேலும் மரைன் என்ஜினீயரிங், ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகள் தொடர்பான அரங்குகள் உள்ளன.

கண்காட்சியை பார்வையிட காலை முதல் மாணவ-மாணவிகள் வந்த வண்ணம் இருந்தனர். நேரம் செல்ல செல்ல மாணவ-மாணவிகளின் கூட்டம் கூடியது. திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாணவ-மாணவிகளும், அவர்களது பெற்றோரும் வந்திருந்தனர். கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அரங்குகளையும் அவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். அப்போது தாங்கள் படிக்க விரும்பும் பிரிவுகள் குறித்து அரங்கில் இருந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும் அரங்குகள் அமைத்திருந்த கல்வி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள், தங்களது கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் படிப்புகள் மற்றும் உயர்கல்வி படிப்பதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், கட்டண விவரம், அடிப்படை வசதிகள், சலுகைகள் உள்ளிட்டவை குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர். மேலும் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் சந்தேகங்களுக்கும் அவர்கள் பதில் அளித்தனர். ஒவ்வொரு கல்வி நிறுவனத்தினரும் உயர் கல்வி படிப்பு தொடர்பாக விளக்க கையேடுகள் மற்றும் துண்டுபிரசுரங்களை வழங்கினர். அதனை மாணவ-மாணவிகள் பெற்றுக்கொண்டனர்.

உள்நாட்டில் படிப்பது மட்டுமில்லாமல், வெளிநாடுகளில் சென்று படிக்கும் வசதி, படிப்புகளின் விவரம் குறித்தும் அறியும் வகையிலும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு கேட்டு தெரிந்துகொண்டனர். மருத்துவ படிப்பில் எம்.பி.பி.எஸ். படிப்பு மட்டுமில்லாமல் பல் மருத்துவம், பிசியோதெரபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகள் குறித்தும், ‘நீட்’ தேர்வு குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு ஊழியர்கள் எடுத்துரைத்தனர். இதேபோல மற்ற படிப்புகளுக்கான தேர்வு முறைகள், என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு முறை குறித்தும் எடுத்துக்கூறினர்.

‘தினத்தந்தி’ கல்வி கண்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதனை காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை இலவசமாக பார்வையிடலாம். இந்த கண்காட்சியில் சென்னை ராமாபுரம்-திருச்சி எஸ்.ஆர்.எம். கல்வி குழுமம், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி கழகம், சென்னை வேல்ஸ், அமேட், சத்தியபாமா ஆகிய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் அரங்குகளும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story