பெங்களூரு புறநகரில் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டம் ராகுல் காந்தி இன்று பேசுகிறார் தேவேகவுடா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு


பெங்களூரு புறநகரில் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டம் ராகுல் காந்தி இன்று பேசுகிறார் தேவேகவுடா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 31 March 2019 4:30 AM IST (Updated: 31 March 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு புறநகரில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

ராகுல்காந்தி பெங்களூரு வருகை

காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கர்நாடகத்தில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற கூட்டணி தலைவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்திற்கு வருகை தந்ததுடன், கலபுரகி, பெங்களூருவில் பிரசாரம் செய்திருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக முதல் முறையாக ராகுல்காந்தி இன்று (ஞாயிற்றுக் கிழமை) பெங்களூருவுக்கு வருகைதர உள்ளார். பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி அருகே துமகூரு ரோட்டில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பேசுகிறார்.

தேவேகவுடாவுடன் இணைந்து...

ராகுல்காந்தி கலந்து கொள்ளும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் பெங்களூருவுக்கு வருகைதர உள்ளார். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்வதால், தேர்தல் பிரசாரத்தையும் கூட்டணி தலைவர்கள் இணைந்தே செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் ராகுல்காந்தியுடன் இணைந்து ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவும் பிரசாரம் செய்ய உள்ளார்.

இதையடுத்து, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இணைந்து இன்று முதல் கூட்டு பிரசாரத்தை தொடங்க உள்ளனர். துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், ஜனதாதளம்(எஸ்) மாநில தலைவர் எச்.விஸ்வநாத் உள்ளிட்ட தலைவர்களும் பிரசாரத்தில் கலந்து கொண்டு தங்களது பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளனர்.

5 லட்சத்திற்கும் மேற்பட்ட...

மேலும் ராகுல்காந்தி கலந்து கொள்ளும் கூட்டத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ராகுல்காந்தி பெங்களூருவுக்கு வருவதையொட்டி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக பிரசாரம் செய்ய இருப்பதால், அக்கட்சிகளின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ராகுல்காந்தி வருகையையொட்டி பெங்களூரு மற்றும் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story