"கோர்ட்டுகளில் வழக்குகள் குறைந்தால் நாடு வளர்ச்சி அடையும்" மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு
கோர்ட்டுகளில் வழக்குகள் குறைந்தால் நாடு வளர்ச்சி அடையும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா கூறினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட கோர்ட்டுகளில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் வக்கீல்களுக்கும், நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி நீதிபதியாக பணி உயர்வு பெற்ற 4 பேருக்கும் நாகர்கோவில் வக்கீல் சங்கம் சார்பில் பாராட்டு விழா நேற்று மாலை கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி கருப்பையா தலைமை தாங்கினார். வக்கீல் சங்க தலைவர் ஜோசப் பெனடிக்ட் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா கலந்து கொண்டார். பின்னர் நீதிபதிகளாக பணி உயர்வு பெற்று உள்ள ஆனந்த், ஜெயந்தி, ராஜலிங்கம் மற்றும் சிவா ராஜேந்திரன் ஆகிய 4 பேருக்கும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் 50 ஆண்டுகளுக்கு மேல் வக்கீலாக பணியாற்றியவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
ஐகோர்ட்டு நீதிபதி பேச்சுவிழாவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா பேசியதாவது:–
நீதிபதி தொழில் என்பது புனிதமானதுடன், மக்கள் நம்பிக்கையின் மறு உருவமாக திகழ்கிறது. தற்போது வக்கீல் தொழில்களுக்கு வரும் இளைஞர்கள் நிதானத்தை கடைபிடிப்பதுடன், தன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால், கோர்ட்டுகளில் உள்ள வழக்குகள் குறைவதன் மூலம் சாத்தியம் ஆகும். வக்கீல் பணியில் சமாதானம் என்பது முதன்மையாக இருப்பது அவசியம். கோர்ட்டுகளில் பணியாற்றுபவர்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். நேர்மையும், உண்மையும் நமது தொழிலின் அடையாளம் ஆகும். கடமைக்கு முதன்மை கொடுத்து மனசாட்சிக்கும், கடவுளுக்கும் தவிர வேறு யாருக்கும் பயப்பட தேவை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கூடுதல் மாவட்ட நீதிபதி அப்துல் காதர், மகிளா கோர்ட்டு நீதிபதி ஜாண் ஆர்.டி. சந்தோஷம், குடும்பநல நீதிபதி கோமதி நாயகம், தலைமை குற்றவியல் நீதிபதி பாண்டியராஜ் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.