சத்தி அருகே கொடுக்கல் –வாங்கல் தகராறில் வேன் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை 2 பெண்கள் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு


சத்தி அருகே கொடுக்கல் –வாங்கல் தகராறில் வேன் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை 2 பெண்கள் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 31 March 2019 4:45 AM IST (Updated: 31 March 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே பணம் கொடுக்கல்–வாங்கல் தகராறில் வேன் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் மில்ரோட்டில் வசித்து வந்தவர் செந்தில்குமார் (வயது 32). வேன்டிரைவர். அவருடைய மனைவி இந்துமதி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. செந்தில்குமாரின் தாய் ராசாத்தி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

ராசாத்தியும், இந்துமதியும் வீட்டு முன்பு இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார்கள். அதே பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் (50). கூலித்தொழிலாளி. இவர் செந்தில்குமாரின் உறவினர் ஆவார்.

சின்னராஜ் செந்தில்குமாரிடம் ரூ.1,800 பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை செந்தில்குமார் கேட்டு வந்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் செந்தில்குமார் உறவினர்களுடன் நேற்று முன்தினம் சின்னராஜ் வீட்டுக்கு சென்று எனது பணத்தை திருப்பி தா என்று மீண்டும் கேட்டுள்ளார்.

அதற்கு அவர், உன்னிடம் கடன் வாங்கிய பணத்தை கோவில் முன்பு வைக்கிறேன். அதை எடுத்துக்கொள்’ என்றார். ஆனால் அதற்கு செந்தில்குமாரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பணத்தை கையில் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சின்னராஜ், அவரது மனைவி பழனியம்மாள் (45), மகள் ரம்யா (22), மருமகன் பால்ராஜ் (25) ஆகிய 4 பேரும் செந்தில்குமாரின் வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த செந்தில்குமாரிடம் கடன் வாங்கியது சம்பந்தமாக மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஆத்திரம் அடைந்த சின்னராஜ் தான் வைத்திருந்த கத்தியால் செந்தில்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் ‘‘அய்யோ, அம்மா’’ என்று அலறியபடி கீழே சாய்ந்தார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கொலை நடந்ததும் 4 பேரும் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்கள்.

இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுபற்றி கடத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பணம்–கொடுக்கல் வாங்கல் தகராறில் வேன்டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story