பர்கூர் வனப்பகுதியில் கடும் வறட்சி வனக்குட்டைகள் வறண்டதால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை


பர்கூர் வனப்பகுதியில் கடும் வறட்சி வனக்குட்டைகள் வறண்டதால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை
x
தினத்தந்தி 31 March 2019 4:00 AM IST (Updated: 31 March 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் வனப்பகுதியில் வறட்சி காரணமாக வனக்குட்டைகள் வறண்டதால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

அந்தியூர்,

அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

மழைக்காலங்களில் இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் உள்ள வனக்குட்டைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும். மேலும் வனப்பகுதி முழுவதும் பச்சைபசேலென காட்சி அளிக்கும். இதனால் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைத்துவிடும். எனவே வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி கிராமங்களுக்குள் புகுவதில்லை.

இந்த நிலையில் அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக வனப்பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து விட்டன. செடி, கொடிகள் கருகிவிட்டன. வனக்குட்டைகள் வறண்டு விட்டதால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. எனவே வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

எனவே வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதை தடுக்க வனப்பகுதியில் செயற்கை வனக்குட்டை அமைத்து அதில் தண்ணீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story