அ.தி.மு.க.–பா.ஜ.க. கொள்கையற்ற கூட்டணி ஆர்.நல்லகண்ணு பேட்டி
அ.தி.மு.க.– பா.ஜ.க. கொள்கையற்ற கூட்டணி என மதுரையில் ஆர்.நல்லகண்ணு பேட்டி அளித்தார்.
மதுரை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை ஆர்.நல்லக்கண்ணு நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மதுரை தொகுதியாகும். இதனால் இந்த தொகுதியில்போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். மோடி கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. இப்போது அவர் தனி ஆளாக நின்று கொண்டிருக்கிறார். நாட்டில் மீண்டும் மதவெறி அரசியல் வந்துவிடக்கூடாது. மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப்படவேண்டும். அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி கொள்ளை அடிப்பதை நோக்கமாக கொண்ட ஒரு கொள்கையற்ற கூட்டணி. தி.மு.க. தலைமையிலான கூட்டணி அரசியல்பூர்வமான, ஆக்கப்பூர்வமான கூட்டணி. தமிழகத்தில் விவசாயமும், தொழிலும் அழிந்துவிட்டது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. பெரியார் பிறந்த மண்ணில் அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.