பா.ஜ.க.விடம் அடகு வைக்கப்பட்ட அ.தி.மு.க.வை மீட்பது திராவிடர் கழகத்தின் கடமை கி.வீரமணி பேச்சு


பா.ஜ.க.விடம் அடகு வைக்கப்பட்ட அ.தி.மு.க.வை மீட்பது திராவிடர் கழகத்தின் கடமை கி.வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 31 March 2019 5:00 AM IST (Updated: 31 March 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.விடம் அடகு வைக்கப்பட்ட அ.தி.மு.க.வை மீட்பது திராவிடர் கழகத்தின் கடமை என்று அதன் தலைவர் கி.வீரமணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

மதுரை,

மதுரை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வெங்கடேசனை ஆதரித்து திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி செல்லூரில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:–

ஊழலை தவிர வேறு எதையும் 5 ஆண்டுகளில் செய்யாத பா.ஜ.க. வுடன் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்துள்ளது. கோடநாடு கொலை வழக்கு, நெடுஞ்சாலைத்துறை ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் புகாரில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சிக்கியுள்ளனர். மதவாத கொள்கையை பின்பற்றும் பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது.

திராவிடர் கழகங்களின் தாய்க்கழகம் என்ற முறையில், அ.தி.மு.க.வை அடகு வைத்து விட்டார்களே என்ற கவலை உள்ளது. மதுரை விமான நிலையத்தில், அ.தி.மு.க. கூட்டணியை மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி என்று சொல்ல வேண்டும் என அமித்ஷா குறிப்பிட்டதே இதற்கு சிறந்த உதாரணமாகும். லேடியா, மோடியா என சவால் விட்டவர் ஜெயலலிதா.

அவர் இருக்கும் போது, வாய்திறக்க பயந்த அ.தி.மு.க.வினர் தற்போது சர்க்கஸ் கம்பெனி போல பேசுகின்றனர். எதிர்கால சந்ததியினரின் வாழ்வு மேம்பட தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் 29 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்தவர் கலைஞர்.

அ.தி.மு.க. கூட்டணி நினைப்பது போல, கடைசி நேரத்தில் பணம் கொடுத்து வெற்றி பெறுவது என்பது முடியாது. பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். 15 நாட்களுக்கு ஒரு முறை என பலகோடி ரூபாய் செலவில் வெளிநாட்டுக்கு பயணம் செய்துள்ளார். அதனால், நாட்டிற்கு கிடைத்த பலன் ஒன்றுமில்லை.

அவரது ஆடை வடிவமைப்பாளருக்கு மாதம் ரூ.15 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடைகளை அணிந்துள்ளார். மோடிக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, அசாமிலும் கருப்புக்கொடி காட்டப்படுகிறது. நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது. மோடியிடம் அடகு வைக்கப்பட்ட அ.தி.மு.க.வை மீட்கும் கடமை திராவிடர் கழகத்துக்கு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story