சொத்து வரி உயர்வு மறு பரிசீலனை கோரி மனு அளிக்கலாம் விருதுநகர் நகரசபை கமி‌ஷனர் தகவல்


சொத்து வரி உயர்வு மறு பரிசீலனை கோரி மனு அளிக்கலாம் விருதுநகர் நகரசபை கமி‌ஷனர் தகவல்
x
தினத்தந்தி 31 March 2019 4:00 AM IST (Updated: 31 March 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் நகராட்சி பகுதியில் சொத்து வரி உயர்வினை மறுபரிசீலனை செய்ய கோரி ஆட்சேபனை உள்ளவர்கள் மனு கொடுக்கலாம் என நகரசபை கமி‌ஷனர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்,

விருதுநகர் நகரசபை கமி‌ஷனர் பார்த்தசாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக அரசு கடந்த 2017–2018 நிதியாண்டில் நகராட்சி பகுதிகளில் வரி விதிக்கப்படாத கட்டிடங்கள் மற்றும் குறைவாக வரி விதிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அளவீடு செய்து சொத்து வரி விதிப்பை சீரமைக்க உத்தரவிட்டது. அதன்படி விருதுநகர் நகராட்சி பகுதியிலும் நகராட்சி நிர்வாகம் மறு அளவீடு செய்து 650 சொத்து வரி விதிப்பினை உயர்வு செய்து நிர்ணயித்தது. இதற்கிடையில் தமிழக அரசு அந்த நடைமுறையை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது.

விருதுநகர் நகரசபை பகுதியில் மொத்தம் உள்ள 30 ஆயிரத்து 680 சொத்து வரி விதிப்பில் 650 சொத்து வரி விதிப்பு மட்டுமே அளவீட்டிற்கு பின் வரி உயர்வு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து தமிழக அரசு அனைத்து நகராட்சி பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளுக்கு 50 சதவீதமும், வணிக கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் வரி விதிப்பு உயர்வு செய்து நிர்ணயிக்குமாறு உத்தரவிட்டது. அதன்படி நகராட்சி நிர்வாகம் சொத்துவரி விதிப்பை மறு நிர்ணயம் செய்தது.

இந்த நிலையில் ஏற்கனவே மறு அளவீடு செய்து சொத்துவரி உயர்த்தப்பட்டவர்கள் தங்களுக்கு அதிகமாக வரி உயர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சேபனை தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் நகரில் 5 சதவீத சொத்துவரி விதிப்பு மட்டுமே மறு அளவீடு செய்யப்பட்டு உயர்வு செய்யப்பட்ட நிலையில் மற்ற சொத்துவரி விதிப்பு 50 மற்றும் 100 சதவீத உயர்வு மட்டுமே செய்யப்பட்டது. இதனால் சொத்து வரி விதிப்பில் பாரபட்சம் உள்ளதாக புகார் எழுந்தது.

இதுபற்றி நகராட்சி கமி‌ஷனர் பார்த்தசாரதியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

தமிழக அரசின் உத்தரவுப்படி தான் முதலில் சொத்துக்கள் அளவீடு செய்யப்பட்டு வரி உயர்வு செய்யப்பட்டது. அதன் பின்னர் தமிழக அரசின் மறுஉத்தரவுப்படி சொத்துவரி 50, 100 சதவீதம் மட்டுமே உயர்வு செய்யப்பட்டது.

எனவே மறு அளவீட்டின்படி சொத்து வரி உயர்வு செய்யப்பட்டது குறித்து மறுபரிசீலனை செய்ய விரும்புபவர்கள் மறு பரிசீலனை செய்ய கோரி மனு கொடுக்கலாம். இந்த மனுக்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரசு உத்தரவுப்படி பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story