நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் பார்வையிட்டார்
நாடாளுமன்ற தேர்தலில்பணியாற்றும் அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை கலெக்டர் பார்வையிட்டார்.
சிவகங்கை,
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1,438 வாக்குசாவடிகள் உள்ளன.
இந்த வாக்கு சாவடிகளில் பணிபுரிபவர்களுக்கு, தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நேற்று நடைபெற்றன. அதில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜெயகாந்தன் பார்வையிட்டார்.
அவருடன் சிவகங்கை தாசில்தார் கண்ணன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கருணாகரன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைகல்லூரியில் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில் ஒவ்வொரு பிரிவாக சென்ற கலெக்டர், தேர்தல் அலுவலர்களுக்கு மண்டல அதிகாரிகள் அளிக்கும் பயிற்சியை நேரில் பார்வையிட்டார். பின்னர் தேர்தலின் போது எப்படி செயல்பட வேண்டும் என்று பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தெரிவித்தார். பின்னர் அவர் திருப்புவனம், திருப்பத்தூர் ஆகிய ஊர்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.