விதிமுறைகளை மீறி சரக்கு வாகனத்தில் வந்த பக்தர்களை நடுரோட்டில் இறக்கிவிட்ட போக்குவரத்து போலீசார் மறியல் செய்ததால் பரபரப்பு
விதிமுறைகளை மீறி சரக்கு வாகனத்தில் வந்த பக்தர்களை போக்குவரத்து போலீசார் நடுரோட்டில் இறக்கிவிட்டனர். இதனால் பக்தர்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மானாமதுரை,
இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம், தற்போது பங்குனி திருவிழா தொடங்க இருப்பதால் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கிராமப்புற பக்தர்கள் பலரும் வாகன வசதி இல்லாததால் டிராக்டர், ஆட்டோ உள்ளிட்டவற்றில் வந்து செல்வது வழக்கம்.
ஆனால் சரக்கு வாகனங்களில் செல்வது தவறு என்று தெரிந்தும் பலர் விதிமுறைகளை மீறி செல்கின்றனர். நேற்று மதுரை விமானம் நிலையம் அருகே உள்ள ஆலங்குளத்தைச் சேர்ந்த கிராமமக்கள் ஒரு சரக்கு வேனில் தாயமங்கலம் சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் மானாமதுரைக்கு வந்த போது, போக்குவரத்து இன்ஸ்பெக்டரான சிவசங்கரநாராயணன் அந்த பகுதியில் வாகனச்சோதனை நடத்தி கொண்டிருந்தார்.
Êஇதைப்பார்த்த இன்ஸ்பெக்டர் சரக்கு வேனில் வந்தவர்களை பார்த்து, விதிமுறைகளை மீறி வந்துள்ளதாக கூறி, போக்குவரத்து போலீசாரை அனுப்பி பக்தர்களை நடுரோட்டில் இறக்கிவிட்டு சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் மதுரை–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் வேனை திரும்ப ஒப்படைத்து பக்தர்களை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மானாமதுரை அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், மானாமதுரை நகரில் வாகன விதிமுறைகளின்படி நடக்காவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஆவணங்கள் முறையாக இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் நகரில் போக்குவரத்து விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றனர்.