குழந்தைகள் பாதுகாப்பில் வேலியே பயிரை மேய்கிறது நீதிபதி ராமலிங்கம் வேதனை
குழந்தைகள் பாதுகாப்பில் வேலியே பயிரை மேயும் நிலைதான் இன்றளவும் நீடிக்கிறது என்று சட்ட பணிகள் ஆணை குழு செயலாளர் நீதிபதி ராமலிங்கம் வேதனையுடன் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மக்கள் நலன் மேம்பாடு நடவடிக்கை பேடு தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பில் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் சப்–கோர்ட்டு நீதிபதி ராமலிங்கம் தலைமை தாங்கினார். நிறுவன இயக்குனர் ராஜேந்திர பிரசாத் முன்னிலை வகித்தார்.
திட்ட இயக்குனர் மன்னர் மன்னன் வரவேற்று பேசினார். மேலாண்மை அலுவலர் சிஜுமேத்யூ சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் நீதிபதி ராமலிங்கம் பேசியதாவது:– தற்போது குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தியதால்தான் வெளியில் தெரிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுநாள் வரை யாருக்கும் தெரியாமல் பேசி முடிக்கப்பட்ட இதுபோன்ற கொடுமைகள் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன. இந்த கொடுமை ரணங்கள் மாற வேண்டும். சமுதாயத்தில் பாலியல் வன்கொடுமை வடு முழுமையாக அழிய வேண்டும்.
குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டும். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி தெளிவாக விளக்கி கூற வேண்டும். பாடம் கற்பிப்பதை போல அல்லாமல் கதை கூறுவதை போல விளக்கி கூற வேண்டும். சமீப காலமாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது யார் பாதுகாப்பானவர்கள் என்று கருதுகிறோமோ அவர்கள் இடத்தில் இருந்து கொடுமை அனுபவிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. வேலியே பயிரை மேயும் இந்த அவல நிலை மாற வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சட்டத்தை முழுமையாக பயன்படுத்தி வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர், சைல்டுலைன் இயக்குனர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குழு உறுப்பினர் பாலபிரபா நன்றி கூறினார்.