வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்கும்போது பணம் கொடுத்தால் நடவடிக்கை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை


வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்கும்போது பணம் கொடுத்தால் நடவடிக்கை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 31 March 2019 3:45 AM IST (Updated: 31 March 2019 3:40 AM IST)
t-max-icont-min-icon

வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்கும்போது பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பரமக்குடி,

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்கும்போது வேட்பாளர்கள் பணம் கொடுப்பதாக பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரி ராமனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க செல்லும்போது அவர்களுக்கு ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பது குற்றமாகும். வெளியூர் நபர்கள் தங்கும் விடுதி, வேறு இடங்களிலோ தங்கி பணப்பட்டுவாடா செய்வதாக எந்த நபர்கள் மீதாவது புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் கமுதக்குடி, சிவானந்தபுரம், அருங்குளம், பகைவென்றி, முதலூர், செய்யாமங்களம் ஆகிய வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பொதுக்கள் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பொருட்களோ, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணமோ கொண்டு சென்றால் அதற்கான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். தேர்தல் விதிமுறை மீறல் குறித்த புகார்களை பொதுமக்கள் அச்சமின்றி தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது பொது தேர்தல் பார்வையாளர் ஆனந்த் ஸ்வரூப், தேர்தல் தொடர்பு அலுவலர் செய்யது முகமது ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story