மோட்டார் சைக்கிளில் ரூ.150–க்கு பெட்ரோல் நிரப்ப அ.தி.மு.க.வினருக்கு வழங்கப்பட்ட ‘டோக்கன்கள்’ பறிமுதல்


மோட்டார் சைக்கிளில் ரூ.150–க்கு பெட்ரோல் நிரப்ப அ.தி.மு.க.வினருக்கு வழங்கப்பட்ட ‘டோக்கன்கள்’ பறிமுதல்
x
தினத்தந்தி 31 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-31T22:23:43+05:30)

மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிளில் ரூ.150–க்கு பெட்ரோல் நிரப்ப அ.தி.மு.க.வினருக்கு வழங்கப்பட்ட ‘டோக்கன்களை’ தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மயிலாடுதுறை,


மயிலாடுதுறை–திருவாரூர் சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் தையல்நாயகி மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அ.தி.மு.க.வினர் 50–க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் தங்களுடைய மோட்டார் சைக்கிள்களுக்கு பெட்ரோல் நிரப்பி கொண்டிருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.


தகவலின்பேரில் அதிகாரிகள் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அ.தி.மு.க.வினரின் 68 மோட்டார் சைக்கிள்கள்களுக்கு ஒரே நேரத்தில் பெட்ரோல் நிரப்பியது தெரியவந்தது.

மேலும் மோட்டார் சைக்கிளில் ரூ.150–க்கு பெட்ரோல் நிரப்ப டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பெட்ரோல் நிரப்புவதற்காக அ.தி.மு.க.வினருக்கு வழங்கப்பட்ட டோக்கன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


பறிமுதல் செய்யப்பட்ட டோக்கன்களை அதிகாரிகள் பார்வையிட்டபோது ரூ.10 ஆயிரத்து 200–க்கு பெட்ரோல் நிரப்பியது தெரியவந்தது. இந்த தொகையை சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்ப்பதற்கும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்வதற்கும் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் தையல்நாயகி மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Next Story