திண்டிவனத்தில் பரபரப்பு, அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல் - டிக்கெட் கேட்டதால் போலீஸ்காரர் ஆத்திரம்


திண்டிவனத்தில் பரபரப்பு, அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல் - டிக்கெட் கேட்டதால் போலீஸ்காரர் ஆத்திரம்
x
தினத்தந்தி 31 March 2019 10:45 PM GMT (Updated: 31 March 2019 5:59 PM GMT)

டிக்கெட் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் அரசு பஸ் கண்டக்டரை போலீஸ்காரர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

திண்டிவனம்,

திண்டிவனம் நகர போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் ஜனார்த்தனன். இவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் திண்டிவனம் செல்வதற்காக விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ்சில் ஏறினார்.

அந்த பஸ்சில் பணியில் இருந்த காஞ்சீபுரம் மாவட்டம் புத்திரன்கோட்டையை சேர்ந்த கண்டக்டர் கோபிநாத் (வயது 41), ஜனார்த்தனனிடம் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் தான் போலீஸ்காரர் என்றும், டிக்கெட் எடுக்க முடியாது என்றும் கூறினார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஜனார்த்தனன் திண்டிவனத்தில் தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரர் சபரிநாதன் என்பவரிடம், தான் போலீஸ் என்று கூறியும் கண்டக்டர் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறி தகராறு செய்கிறார் என்று செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த பஸ் அதிகாலை 2.35 மணி அளவில் திண்டிவனம் மேம்பாலம் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது. அந்த சமயத்தில் அரசு பஸ்சில் ஏறிய போலீஸ்காரர் சபரிநாதன், கண்டக்டர் கோபிநாத்திடம் போலீஸ் என்று கூறியும், ஏன் டிக்கெட் எடுக்குமாறு கூறுகிறாய் என்று கூறியபடி அவரது கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கண்டக்டர் மற்றும் டிரைவர் முருகன் ஆகியோர் பஸ்சை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நிறுத்தினர். மேலும் அவ்வழியே வந்த அரசு பஸ்களையும் வழிமறித்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அப்போது இதுபற்றி அறிந்த பிற அரசு பஸ் கண்டக்டர்கள், டிரைவர்கள் கண்டக்டர் கோபிநாத்தை தாக்கிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பஸ்களில் வந்த பயணிகள் போராட்டம் காரணமாக அவதியடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்துக்கழக டிரைவர்கள், கண்டக்டர்களிடம் இந்த விவகாரம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற டிரைவர்கள், கண்டக்டர்கள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் திருச்சி- சென்னை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே அரசு பஸ் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் சபரிநாதன், ஜனார்த்தனன் ஆகியோரை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விழுப்புரம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

Next Story