விழுப்புரம் அருகே பரபரப்பு, செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்


விழுப்புரம் அருகே பரபரப்பு, செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 April 2019 3:30 AM IST (Updated: 31 March 2019 11:29 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே மகாராஜபுரம் லட்சுமி நகர், மகாதேவன் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி குடியிருப்புகளின் மத்தியில் தனியார் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்க முடிவு செய்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் இங்கு செல்போன் கோபுரம் அமைத்தால், அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சல் சிறுவர் மற்றும் பெரியவர் களுக்கு புற்றுநோய், கர்ப்பிணிகளுக்கு சிசு பாதிப்பு, ஆண்மைக்குறைவு போன்றவை ஏற்படுவதோடு, பறவை இனங்களும் அழியும் என்று கூறி, செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். இருப்பினும் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் மகாதேவன் நகர் பகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் செல்போன் கோபுரம் அமைக்க பள்ளம் தோண்டும் பணியை தொடங்கினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த லட்சுமி நகர், மகாதேவன் நகர் குடியிருப்பு பகுதி மக்கள் பள்ளம் தோண்டப்பட்ட இடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதோடு, இங்கு செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், இந்த பிரச்சினை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story