நீட் தேர்வை கொண்டு வந்த பா.ஜனதா கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. ஆவேசம்

நீட் தேர்வை கொண்டு வந்த பா.ஜனதா கூட்டணியை தேர்தல் மூலம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கனிமாழி, எம்.பி. ஆவேசமாக தெரிவித்தார்.
திருச்செந்தூர்,
நீட் தேர்வை கொண்டு வந்த பா.ஜனதா கூட்டணியை தேர்தல் மூலம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கனிமாழி, எம்.பி. ஆவேசமாக தெரிவித்தார்.
கனிமொழி பிரசாரம்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று காலையில் நல்லூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அவர் திறந்த ஜீப்பில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து தெற்கு நல்லூர், மூலக்கரை, அம்மன்புரம், குரங்கன்தட்டு, வீரமாணிக்கம், மேலபுதுக்குடி, செங்குழி, பூச்சிக்காடு, தளவாய்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.
வட்டி இல்லாத கடன்
இந்த பிரசாரத்தின்போது அவர் பேசுகையில், ‘விவசாயிகளின் விவசாய கடன்கள், கல்விக்கடன் உள்ளிட்டவை தள்ளுபடி செய்யப்படும். 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, 50 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்படும்’ என்றார்.
இந்த பிரசாரத்தின்போது, தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ராமஜெயம், ஜனகர், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவீன்குமார், அம்மன்புரத்தை சேர்ந்த ஞானராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலந்தலை
நேற்று மாலையில் அவர் திருச்செந்தூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் கனிமொழி எம்.பி. திருச்செந்தூர் அருகே ஆலந்தலை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது;-
வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியில் நாம் என்னென்ன அடக்கு முறைகளை சந்தித்தோம் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும். மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் மக்களை பிரித்து ஆளக்கூடிய மத்திய அரசாங்கம், தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத நீட் போன்ற திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மீது திணித்து பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி விட்டது. இதனால் வரும் தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு எதிராக வாக்களித்து அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஒரு கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் விரைவில் அ.தி.மு.க. ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
அதனை தொடர்ந்து வீரபாண்டியன்பட்டினத்தில் அவர் பேசியதாவது;-
மத்தியில் உள்ள பா.ஜனதா நம் மொழியை, கலாசாரத்தை, இனத்தை அடக்கி ஒடுக்கி இந்தியா என்பது ஒருமுக தன்மையுள்ள நாடாக மாற்ற நினைக்கிறார்கள். மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் நம்மை பிரிக்க நினைப்பவர்கள் தான் பா.ஜனதாவினர். இதனை அறிந்து நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும். நான் சொல்லவில்லை. தி.மு.க.வினர் சொல்லவில்லை. ஆனால் ஒரு ஆய்வறிக்கையின் படி இந்தியாவிலேயே மோசமான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த முதல் -அமைச்சர் தமிழ்நாட்டுக்கு தேவையா என்று மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். எனவே நாம் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.விற்கு இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். இதனை அறிந்து உங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். உங்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை எனக்கு வழங்க கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டை தாரை வார்த்து கொடுத்த அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை உருவாக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி உருவாக வேண்டும். நாங்கள் தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய அத்தனை முயற்சிகளையும் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
யார்-யார்?
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள் சுடலை, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரோட்டரி கோ, காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன், மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக காயாமொழி, தேரிகுடியிருப்பு, நடுநாலுமூலைகிணறு, கீழநாலுமூலைகிணறு, முருகன்குறிச்சி, நா.முத்தையாபுரம், சங்கிவிளை, பிச்சிவிளை, மறவன் விளை, குமாரபுரம், தளவாய்புரம், பள்ளத்தூர், மணக்காடு, அமலிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அதன் பின்னர் ஓடக்கரை பகுதியில் பிரசாரம் செய்த கனிமொழி எம்.பி.க்கு காயல்பட்டினம் தி.மு.க. நகர செயலாளர் முத்து முகமது தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் பூந்தோட்டம், மன்னர்ராஜா கோவில் தெரு, புதிய பஸ் நிலையம், ரத்தினபுரி, லட்சுமிபுரம், பைபாஸ் ரோடு, காயல்பட்டினம் சதுக்கை தெரு, கோமான் தெரு, அருணாசலபுரம், அலியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். காயல்பட்டினம் தீவுத்தெருவில் பிரசாரத்தை முடித்தார்.
Related Tags :
Next Story