மழை வேண்டி ஊரை காலி செய்து விட்டு தோட்டத்தில் குடியேறிய கிராம மக்கள் பர்கூர் அருகே வினோதம்


மழை வேண்டி ஊரை காலி செய்து விட்டு தோட்டத்தில் குடியேறிய கிராம மக்கள் பர்கூர் அருகே வினோதம்
x
தினத்தந்தி 31 March 2019 10:30 PM GMT (Updated: 2019-04-01T00:20:54+05:30)

மழை வேண்டி ஊரை காலி செய்து விட்டு கிராம மக்கள் தோட்டத்தில் குடியேறினார்கள்.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மேடுகம்பள்ளி, கச்சாலிகானூர், மூலக்கொல்லை ஆகிய பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு, கால்நடைகள் வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த 15 ஆண்டுகளாக மாரியம்மன் பண்டிகையும் நடத்தப்படவில்லை. அவ்வாறு நடத்த முயன்றால் ஏதாவது தடங்கல் வந்த வண்ணம் இருந்தது.

அப்போது சாமி குத்தம் உள்ளதால் ஊரில் போதிய மழை இல்லை. அதனால் தான் மாரியம்மன் பண்டிகை செய்ய முடியவில்லை என்று அருள் வாக்கு கூறிய ஒருவர் கூறினார். இதையடுத்து மேடுகம்பள்ளி உள்ளிட்ட 3 கிராம மக்களும் ஒருநாள் ஊரை காலி செய்து விட்டு அருகில் உள்ள மலைப்பகுதியில் தோட்டத்தில் குடியேறி மாலையில் வீடு திரும்ப முடிவு செய்தனர்.

இந்தநிலையில் நேற்று மழை வேண்டி கிராம மக்கள் தங்களின் வீடுகளை பூட்டி விட்டு ஊரை காலி செய்து கிராம எல்லையில் தடுப்புகளை வைத்து உணவு சமைக்க தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு தங்களின் குழந்தைகள், கால்நடைகளுடன் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றனர். காலையில் சென்ற அவர்கள் அந்த பகுதியிலேயே சமைத்து சாப்பிட்டனர். மேலும் அங்கு அம்மன் சிலை வைத்து அவர்கள் சிறப்பு பூஜை நடத்தினர். மேலும் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். பின்னர் மாலை 6 மணிக்கு அவர்கள் மீண்டும் வீடு திரும்பினார்கள். முன்னதாக கிராம எல்லையில் கிடா வெட்டி பூஜை செய்து சாமியை வழிபட்டு வீடுகளுக்கு சென்றனர்.

Next Story