நெல்லை அருகே இளம்பெண் வெட்டிக்கொலை கணவர் வெறிச்செயல்


நெல்லை அருகே இளம்பெண் வெட்டிக்கொலை கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 1 April 2019 3:00 AM IST (Updated: 1 April 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை,

நெல்லை அருகே இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

இளம்பெண்

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள திருமலைக்கொழுந்துபுரத்தை சேர்ந்தவர் சுடலை நயினார் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி வெயிலாச்சி (29). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சுடலை நயினாருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் நேற்று மாலையில் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுடலை நயினார், அவருடைய தம்பி ஆயிரம் (25) மற்றும் தாய் வசந்தா (60) ஆகியோர் சேர்ந்து வெயிலாச்சியை தாக்கினர். பின்னர் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய வெயிலாச்சியை மடக்கிப்பிடித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வெயிலாச்சி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வெயிலாச்சி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாமியார் சிக்கினார்

சம்பவம் நடந்த உடன் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதற்கிடையே போலீசார் அந்த வழியாக சென்ற போது, வெளியூருக்கு தப்ப முயன்ற வசந்தா போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அவரை போலீசார் விரட்டிச்சென்று பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தப்பி ஓடிய சுடலை நயினார், ஆயிரம் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். நெல்லை அருகே இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story