குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவது தடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவது தடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 1 April 2019 3:45 AM IST (Updated: 1 April 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி நகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தில் தண்ணீர் உறிஞ்சுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், ஒரு வறட்சியான மாவட்டம் ஆகும். மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழையளவு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் நிலத்தடி நீரும் குறைந்து கொண்டே செல்கின்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது பெரிய நகரம் அறந்தாங்கி ஆகும். அறந்தாங்கி நகராட்சியாகவும், தாலுகா தலைமையிடமாகவும் உள்ளது. அறந்தாங்கி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல ஆங்காங்கே ஆழ்குழாய் அமைக்கப்பட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், நகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் தற்போது அறந்தாங்கி நகரில் உள்ள பொதுமக்கள் சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் குடிநீரை ஒரு குடம் ரூ.10 வரை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நகர் பகுதிகளில் உள்ள பொதுமக்களில் சிலர் தங்களது வீட்டிற்கு வரும் காவிரி குடிநீர் குழாய்களில் மின்மோட்டாரை பொருத்தி, தண்ணீரை உறிஞ்சி சேமித்து வைத்து கொள்கின்றனர்.

இதனால் அடுத்தடுத்த வீடுகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், வசதி படைத்தவர்கள், அவர்களது வீட்டிற்கு வரும் குடிநீர் குழாயில் மின்மோட்டாரை பொருத்தி, அவர்களுக்கு தேவையான தண்ணீரை உறிஞ்சி சேமித்து வைத்து கொள்கின்றனர். இதனால் எங்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் நாங்கள் வெளியில் ஒரு குடம் ரூ.10 கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது வந்து ஆய்வு செய்துவிட்டு செல்கின்றனர்.

ஆனால் அவர்கள் குடிநீர் குழாயில் மின்மோட்டாரை பொருத்தில் தண்ணீர் உறிஞ்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது கிடையாது. இதனால் அவர்கள் தொடர்ந்து தண்ணீரை உறிஞ்சி வருகின்றனர். எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அறந்தாங்கி நகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாயில் மின்மோட்டாரை பொருத்தி தண்ணீர் உறிஞ்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story