சத்தியமங்கலம் அருகே வேன் டிரைவர் கொலை வழக்கில் 4 பேர் கைது 2 பெண்களுக்கு வலைவீச்சு


சத்தியமங்கலம் அருகே வேன் டிரைவர் கொலை வழக்கில் 4 பேர் கைது 2 பெண்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 April 2019 4:45 AM IST (Updated: 1 April 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே வேன் டிரைவர் கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பெண்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உக்கரம் மில்ரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 32). வேன் டிரைவர். இவருடைய மனைவி இந்துமதி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. செந்தில்குமாரின் தாய் ராசாத்தி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். அதே பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் (50). கூலித்தொழிலாளி. இவர் செந்தில்குமாரின் உறவினர் ஆவார்.

சின்னராஜ் செந்தில்குமாரிடம் 1,800 ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திரும்ப தரும்படி அடிக்கடி சின்னராஜிடம் செந்தில்குமார் கேட்டு வந்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று செந்தில்குமார் வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை கவனித்த பொதுமக்கள் இதுபற்றி கடத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்து கிடந்த செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கடத்தூர் போலீசார் கோபி அருகே உள்ள காசிபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் 4 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் 4 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் அனைவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இதனால் போலீசார் அவர்கள் 4 பேரையும் கடத்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் 4 பேரும், உக்கரம் பகுதியை சேர்ந்த சின்னராஜ், பால்ராஜ் மற்றும் அவர்களுடைய உறவினர்களான சுதாகர் (35), தர்மராஜ் (30) ஆகியோர் என்பதும், கடந்த 29–ந் தேதி உக்கரம் மில்மேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமாரை கத்தியால் குத்திக்கொலை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், செந்தில்குமாரை குத்திக்கொலை செய்ததாக 4 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தொழிலாளி சின்னராஜ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:–

செந்தில்குமாரிடம் ரூ.1,800 கடனாக வாங்கி இருந்தேன். உறவினர்தானே என்ற முறையில் பிறகு கொடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் செந்தில்குமார் அடிக்கடி பணத்தை திரும்பக்கேட்டு தொந்தரவு செய்தார். மேலும், பொதுமக்கள் மத்தியில் வைத்தும் பணத்தை கேட்டார். இதனால் எனக்கு பெருத்த அவமானமாக இருந்தது. அதனால் கடந்த 29–ந்தேதி நான் செந்தில்குமார் வீட்டுக்கு சென்றேன். அப்போது என்னுடன் பால்ராஜ், சுதாகர், தர்மராஜ் மற்றும் என்னுடைய மனைவி பழனியம்மாள், மகள் ரம்யா ஆகியோர் வந்தனர்.

பின்னர் செந்தில்குமாரிடம் பணத்தை விரைவில் தந்துவிடுகிறேன் என்று கூறினேன். அப்போது எனக்கும், செந்தில்குமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செந்தில்குமாரை கத்தியால் குத்திக்கொலை செய்தோம். அதன்பின்னர் நாங்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம்

மேற்கண்டவாறு வாக்குமூலத்தில் தெரியவந்து உள்ளது.

மேலும் இந்த கொலை வழக்கில் தப்பிஓடிய பழனியம்மாள், ரம்யா ஆகிய 2 பெண்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story