திருட்டுக்கு பயந்து காரில் எடுத்து சென்ற 50 பவுன் நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்ததால் பெண் அதிர்ச்சி


திருட்டுக்கு பயந்து காரில் எடுத்து சென்ற 50 பவுன் நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்ததால் பெண் அதிர்ச்சி
x
தினத்தந்தி 31 March 2019 11:15 PM GMT (Updated: 31 March 2019 8:19 PM GMT)

திருட்டுக்கு பயந்து காரில் எடுத்து சென்ற 50 பவுன் நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்ததால் பெண் அதிர்ச்சி அடைந்தார்.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவில்-மயிலாடுதுறை மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் இந்துமதி தலைமையில் போலீசார் அறிவழகன், வெங்கட்ராமன், அருள்ராஜா மற்றும் அய்யப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் 50 பவுன் நகைகள் இருப்பது தெரிய வந்தது. அந்த நகைகளுக்கான ஆவணங்கள் தொடர்பாக காருக்குள் இருந்த பெண்ணிடம் கேட்டபோது அவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண் திருவாவடுதுறையை சேர்ந்த பஜ்ஜர் ரஹ்மான் மனைவி சர்புனிஷா (வயது 53) என்பதும், சீர்காழியை அடுத்த வடகால் கிராமத்தில் உறவினர் ஒருவர் இறந்த துக்க நிகழ்விற்கு சென்று விட்டு ஊர் திரும்பியதும் தெரிய வந்தது. வீட்டில் நகைகளை வைத்து விட்டு வந்தால் திருடர்கள் அதை திருடிக்கொண்டு போய் விடுவார்கள் என்று கையிலேயே நகைகளை எடுத்து சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு கொண்டு செல்வதாக அந்த பெண் தெரிவித்தார்.

இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அந்த நகைகளை பறிமுதல் செய்து சீர்காழி தாசில்தார் அலுவலகம் கொண்டு சென்று உதவி தாசில்தாரிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். அந்த நகைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது.

திருட்டுக்கு பயந்து காரில் எடுத்து சென்ற 50 பவுன் நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story