பெங்களூருவில் கூட்டணி தலைவா்கள் ஒரே மேடையில் பிரசாரம் ராகுல்காந்தி ஆவேச பேச்சு

பெங்களூருவில் கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர். அப்போது பா.ஜனதா தலைவர்களுக்கு எடியூரப்பா கொடுத்த ரூ.1,800 கோடி எங்கிருந்து வந்தது? என்று ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தல் கர்நாடகத்தில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தல்
பெங்களூரு உள்பட 14 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதியும், மீதமுள்ள 14 தொகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதியும் நடைபெறுகிறது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்கின்றன. காங்கிரஸ் 21 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) 7 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
வியர்வை சிந்துகிறார்கள்
இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
நாட்டின் வளர்ச்சியில் தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரின் பங்கும் உள்ளது. ஏழைகளும் நாட்டின் வளர்ச்சிக்காக வியர்வை சிந்துகிறார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்காக மோடி எதையும் செய்யவில்லை.
ரூ.30 ஆயிரம் கோடி
ஆனால் கடந்த 5 ஆண்டில் மோடி, பணக்காரர்கள் பயன் பெறும்வகையில் மட்டுமே திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். தன்னை சவ்கிதார் (காவலாளி) என்று கூறிக்கொள்ளும் மோடி, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு வழங்கியுள்ளார்.
இதன் மூலம் அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. அனைத்து சட்டங்களையும் மீறி மோடி இந்த ஒப்பந்தத்தை அவருக்கு வழங்கி இருக்கிறார். சி.பி.ஐ. அமைப்பின் இயக்குனரை பிரதமர் நள்ளிரவில் மாற்றினார்.
எங்கிருந்து பணம் வந்தது?
5 ஆண்டில் 15 பணக்காரர்களின் ரூ.3½ லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று பிரதமரும், நிதி மந்திரியும் சொல்கிறார்கள்.
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார். பஞ்சாப், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கார் ஆகிய மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களால் கடனை தள்ளுபடி செய்ய எவ்வாறு முடிந்தது?. அவர்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது?.
எடியூரப்பா ரூ.1,800 கோடி
பிரதமர் மோடிக்கு, நிரவ்மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட பணக்காரர்களுக்கு கொடுக்க பணம் உள்ளது. ஏழைகளுக்கு வழங்க பணம் இல்லை. கர்நாடகத்தில் எடியூரப்பா ரூ.1,800 கோடியை பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கு வழங்கி இருப்பதாக டைரியில் எழுதி வைத்துள்ளார்.
அத்வானி, அருண்ஜெட்லி, நிதின் கட்காரி உள்ளிட்டோருக்கு வழங்கியதாக கூறியுள்ளார். எடியூரப்பாவுக்கு அந்த பணம் எங்கிருந்து வந்தது?. அது கர்நாடக விவசாயிகள் மற்றும் சாமானிய மக்களின் பணம்.
துல்லிய தாக்குதல்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், 6 மாதத்தில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதனால் 25 கோடி பேர் பயன் பெறுவார்கள். ரூ.12 ஆயிரத்துக்குள் மாத வருமானம் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெறுவார்கள். இது வறுமைக்கு எதிரான காங்கிரசின் துல்லிய தாக்குதல் ஆகும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக மோடி உறுதியளித்தார். அந்த பணத்தை டெபாசிட் செய்தாரா?. பணமதிப்பிழப்பு திட்டம் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பணத்தை பறித்தார்.
ஒரே வகையான வரி
சரக்கு-சேவை வரி திட்டம் மூலம் அதிகளவில் ‘கப்பர்சிங்’ வரியை மோடி அமல்படுத்தியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த சரக்கு-சேவை வரி திட்டத்தில் மாற்றம் செய்யப்படும். நாடு முழுவதும் ஒரே வகையான வரி நடைமுறைப்படுத்தப்படும்.
கர்நாடகம், இந்தியாவில் புதிதாக தொழில் தொடங்குபவர்களின் தலைநகரமாக திகழ்கிறது. தற்போது தொழில் தொடங்க வேண்டுமென்றால் அதற்கு பல்வேறு அலுவலகங்களுக்கு சென்று அனுமதி பெற வேண்டும். அதற்கு லஞ்சம் வழங்க வேண்டும். இதனால் தொழில் தொடங்குபவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
பொய்யான வாக்குறுதிகள்
காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், அனுமதி இல்லாமல் தொழில் செய்ய வகை செய்யப்படும். மோடியின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) தொண்டர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
ஒரே மேடையில் கூட்டணி தலைவர்கள்
இந்த பிரசார கூட்டத்தில் ஒரே மேடையில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சி தலைவர்கள் அமர்ந்திருந்தனர். அதாவது முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ேவணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் ெசயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, கே.எச்.முனியப்பா எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டதால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story






