விழா எதுவும் நடத்தாமல் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட வாரச்சந்தை திறப்பு


விழா எதுவும் நடத்தாமல் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட வாரச்சந்தை திறப்பு
x
தினத்தந்தி 1 April 2019 3:15 AM IST (Updated: 1 April 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில், விழா எதுவும் நடத்தாமல் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட வாரச்சந்தை திறக்கப்பட்டது.

வேடசந்தூர்,

வேடசந்தூர் தாலுகா அலுவலக ரோட்டில் அமைந்துள்ள வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும். இந்த சந்தையில் காய்கறிகள் முதல் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள்.

பழமையான கட்டிடத்தில் செயல்பட்ட வாரச்சந்தை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் வாரச்சந்தை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் கடந்த வாரம் புதிதாக கட்டிய கட்டிடத்தின் வெளிப்புறத்தில் சாலையின் இருபுறங்களிலும் வியாபாரிகள் தற்காலிக கடைகளை வைத்து வியாபாரம் செய்தனர். கொளுத்தும் வெயிலில் வியாபாரம் செய்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இந்த சாலையில் தான் போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளது. தேர்தல் நேரம் என்பதால் உயர் அதிகாரிகள் கூட வாகனங்களில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று சந்தை திறப்பு விழா எதுவும் நடத்தாமல் வாரச்சந்தை திறக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் ஆர்வமுடன் வியாபாரத்தை தொடங்கினர். பொதுமக்களும் சிரமமின்றி காய்கறிகள் வாங்கி சென்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story