விளாத்திகுளம் தொகுதியில் “50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார்” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


விளாத்திகுளம் தொகுதியில் “50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார்” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 2 April 2019 4:00 AM IST (Updated: 1 April 2019 8:23 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனை ஆதரித்து, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிக்கு தூத்துக்குடி-எட்டயபுரம் ரோடு சங்கராப்பேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் செய்கின்றனர்.

தூத்துக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வடக்கு மாவட்டத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திரளானவர்கள் கலந்து கொள்ள உள்ளோம். இந்த பொதுக்கூட்டத்தில் தன்னெழுச்சியாக பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜனதா, பா.ம.க. தே.மு.தி.க., புதிய தமிழகம், த.ம.மு.க., சமத்துவ மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் திரளாக கலந்து கொள்வார்கள்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எட்டயபுரத்தில் மாலை 4 மணிக்கு திறந்தவேனில் பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 4.30 மணிக்கு புதூரிலும், 5 மணிக்கு நாகலாபுரத்திலும், 5.30 மணிக்கு விளாத்திகுளத்திலும், 6 மணிக்கு சூரங்குடியிலும், 6.30 மணிக்கு வேம்பாரிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி என்றுமே அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிப்போம். இங்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

அவருடன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன், நெல்லை-தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

பின்னர் விளாத்திகுளம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன், விளாத்திகுளம் நகர பஞ்சாயத்து பகுதிகளில் வீதி வீதியாக சென்று, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பிரசாரத்தின்போது அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் பேசுகையில், ‘மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து திட்டங்களையும் சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். அவரது நல்லாட்சி தொடர்ந்திட இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்’ என்று கூறினார்.

பா.ஜனதா மாவட்ட விவசாய அணி செயலாளர் சேதுராஜ், ஒன்றிய தலைவர் சக்திகுமார், வக்கீல் அணி ஒன்றிய தலைவர் பொன்ராஜ், அ.தி.மு.க. மாவட்ட வக்கீல் அணி இணை செயலாளர் பாபு செல்வகுமார், ஜெயலலிதா பேரவை குட்லக் செல்வராஜ், த.மா.கா. ஒன்றிய செயலாளர் மேடைசேர்மன், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் தங்கசாமி, பா.ம.க. ஒன்றிய செயலாளர்கள் செந்தில் நாராயணன், கருப்பசாமி, பசும்பொன் தேசிய கழக ஒன்றிய செயலாளர் பொன்பாண்டி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story