சுட்டெரிக்கும் வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு போதிய விலை இல்லாததால் தொழிலாளர்கள் கவலை


சுட்டெரிக்கும் வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு போதிய விலை இல்லாததால் தொழிலாளர்கள் கவலை
x
தினத்தந்தி 1 April 2019 10:45 PM GMT (Updated: 1 April 2019 3:21 PM GMT)

குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. போதிய விலை இல்லாததால் உப்பளத் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தென்தாமரைகுளம்,

குமரி மாவட்டத்தில் பிரதான தொழிலான விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும், கடற்கரை பகுதியில் உப்பள தொழிலும் சிறந்து விளங்கியது. குமரி மாவட்டம்  கேரளாவில் இருந்து தாய் தமிழகத்தோடு இணைந்த போது குளச்சல், ராஜாக்கமங்கலம், தாமரைகுளம், பால்குளம், கோவளம், வாரியூர் மற்றும் புத்தளம் போன்ற பகுதிகளில் உப்பளம் இருந்தது. ஆனால், பருவநிலை மாற்றத்தால் உப்பளத் தொழில் நலிவடைந்ததால் தற்போது தாமரைக்குளம் பகுதியில் மட்டும் உப்பளத் தொழில் நடைபெற்று வருகிறது.

உப்பு உற்பத்தி தென்மேற்கு பருவமழை, வடமேற்கு பருவமழை இவைகளை அனுசரித்து நடைபெறும். குறிப்பாக மார்ச், ஏப்ரல் மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உப்பு உற்பத்தி அதிகமாக இருக்கும்.

தற்போது குமரி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் தாமரைகுளம் பகுதியில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், உப்பளத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், போதிய விலை இல்லாததால் கவலையடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உப்பள தொழிலாளர் ஒருவர் கூறியதாவது:–

உப்பள பாத்திகளில் இருந்து சேகரிக்கப்படும் உப்பு மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்படுகிறது. 75 கிலோ எடை கொண்ட ஒரு மூடை உப்பு ரூ.100 இருந்து ரூ.150 வரை விற்கப்படுகிறது. இதில் உப்பள தொழிலாளர்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை.

 தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு உப்பு கொண்டு வருவதால் இங்குள்ள உப்புக்கு போதிய விலை கிடைக்கவில்லை.

பொதுமக்கள் பரல் உப்பை அதிகம் விரும்பவில்லை. அயோடின் கலந்த உப்பையே அரசு பரிந்துரை செய்வதால் பொடி உப்பையே பயன்படுத்தி வருகின்றனர். இங்கு உள்ள சிறு உற்பத்தியாளர்கள் பொடி உப்பு தயாரிக்கும் வசதி இன்றி உள்ளனர். எனவே, உப்பள தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இந்த தொழிலை பாதுகாக்க அரசு தனி வாரியம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story