பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து ஆதரவு திரட்டினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் ஆ.மணி போட்டியிடுகிறார். அவருக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர் பார் இளங்கோவன் ஆகியோர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். மேலும் வேட்பாளர் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி நேற்று பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி, கடத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒடசல்பட்டி, மணியம்பாடி, நடூர், முத்தானூர், புதுரெட்டியூர், தேக்கல்நாயக்கன்பட்டி, புளியம்பட்டி, ஜாலியூர், நத்தமேடு, மடதஅள்ளி, புட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட்பாளர் ஆ.மணி திறந்த ஜீப்பிலும், வீதி, வீதியாக நடந்து சென்றும் வாக்காளர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது ஆங்காங்கே பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த தி.மு.க. ஆட்சி காலங்களில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களையும், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிறப்பு அம்சங்களையும், வாக்காளர்களிடம் எடுத்து கூறி வேட்பாளர் ஆதரவு திரட்டினார். மேலும் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து வாக்கு கேட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் வக்கீல் முனிராஜ், ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், கடத்தூர் பேரூராட்சி செயலாளர் மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெகநாதன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி ஒருங்கிணைப்பாளர் கோகுல், ஊராட்சி செயலாளர் பழனி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story