கொத்தனாரை கொலை செய்த அண்ணன், தம்பிக்கு ஆயுள் தண்டனை திருவாரூர் கோர்ட்டு தீர்ப்பு
மன்னார்குடியில் கொத்தனாரை கொலை செய்த அண்ணன், தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
திருவாரூர்,
மன்னார்குடி காத்தாயியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 50). கொத்தனார். இவருடைய மனைவி மோகனாம்பாள் (45). இவருக்கு காது சரியாக கேட்காது என்பதால் வீட்டில் அதிக சத்தத்துடன் டி.வி. பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ரமேஷ் (49), அவருடைய தம்பி ராஜ்மோகன் (45) ஆகிய இருவரும் ஏன் சத்தமாக டி.வி. பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் என்று தகராறு செய்து, மோகனாம்பாளை தள்ளி விட்டனர். இதில் அவர் மயக்கமடைந்தார். இதனை தட்டி கேட்ட ஜெயராமனை அண்ணன்–தம்பி இருவரும் சேர்ந்து தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராமன் உயிரிழந்தார். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், ராஜ்மோகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கலைமதி, கொத்தனாரை கொலை செய்ததற்காக ரமேஷ், ராஜ்மோகன் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.