நீண்ட இழுபறிக்கு பிறகு உமேஷ்ஜாதவ் எம்.எல்.ஏ. ராஜினாமா ஏற்பு சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவிப்பு
நீண்ட இழுபறிக்கு பிறகு உமேஷ்ஜாதவ் எம்.எல்.ஏ. ராஜினாமாவை ஏற்றதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர், உமேஷ் ஜாதவ். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கடிதம் கொடுத்தார். அதற்கு முன்பே, கொறடா உத்தரவை மீறியதால் உமேஷ்ஜாதவை, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் காங்கிரஸ் மனு வழங்கியது.
அதனால் உமேஷ்ஜாதவ் கடிதத்தை சபாநாயகர் அங்கீகரிக்கவில்லை. இந்த நிலையில் உமேஷ்ஜாதவ் பிரதமர் மோடி முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். அவர் தற்போது கலபுரகி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், சட்ட சிக்கல் உண்டாகும் என்று கருதப்பட்டது.
இந்த நிலையில் உமேஷ்ஜாதவ் ராஜினாமா குறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் முன்னிலையில் விதான சவுதாவில் விசாரணை நடைபெற்றது. தனது ராஜினாமாவுக்கு உரிய விளக்கத்தை உமேஷ்ஜாதவ் அளித்தார்.
அதே வேளையில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. அந்த விசாரணை முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பை சபாநாயகர் ஒத்திவைத்தார். இந்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு உமேஷ்ஜாதவ்வின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சபாநாயகர் நேற்று வெளியிட்டார்.
அவர் யாருடைய அழுத்தத்திற்கோ அல்லது ஆசைகளுக்கு பணியாமல், சொந்த விருப்பத்தின் பேரிலேயே பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதனால் அவரது ராஜினாமாவை ஏற்பதாக சபாநாயகர் கூறி இருக்கிறார். இதன் மூலம் உமேஷ்ஜாதவ் நிம்மதி அடைந்து உள்ளார்.
Related Tags :
Next Story