மொடக்குறிச்சி அருகே கள்ளக்காதல் ஜோடி தீக்குளித்து தற்கொலை


மொடக்குறிச்சி அருகே கள்ளக்காதல் ஜோடி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 1 April 2019 11:15 PM GMT (Updated: 1 April 2019 8:37 PM GMT)

மொடக்குறிச்சி அருகே கள்ளக்காதல் ஜோடி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது.

மொடக்குறிச்சி,

வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை சுருட்டுக்கார தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். அவருடைய மகன் சரவணன் (வயது 23). கூலித்தொழிலாளி. திருமணம் ஆகாதவர். அதே பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். அவருடைய மனைவி பாரதி (36). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஒரே தெருவில் வசித்து வந்ததால் சரவணனுக்கும், பாரதிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் ஊரை விட்டு சென்றுவிட்டனர். இதனால் உறவினர்கள் அவர்களை பல இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள முத்துகவுண்டன்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருவது சரவணனின் உறவினர் ஒருவருக்கு தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர் நேற்று காலை முத்துகவுண்டன்பாளையம் சென்றார். அங்கு சரவணனை சந்தித்து அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் ‘பாரதிக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். உன்னைவிட அவருக்கு வயது அதிகம். அந்த பெண்ணுடனான தொடர்பை விட்டுவிடு. உனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதனால் சரவணன் தானும், பாரதியும் இனி சேர்ந்து வாழ முடியாது என்று நினைத்தார். இதுபற்றி அவர் பாரதியிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அவரும் அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

மனம் உடைந்த அவர்கள் 2 பேரும் வீட்டில் இருந்து மண்எண்ணெயை எடுத்து தங்களது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டனர். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. உடல் கருகிய நிலையில் 2 பேரும் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

அதற்குள் 2 பேரும் கருகிய நிலையில் பிணமானார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story