அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் ஆவேசம்


அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் ஆவேசம்
x
தினத்தந்தி 1 April 2019 11:15 PM GMT (Updated: 1 April 2019 8:37 PM GMT)

அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்று ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் ஆவேசமாக பேசினார்.

ஈரோடு,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., தொடர் பிரசாரம் செய்து வருகிறார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் கே.சி.செந்தில்குமார் போட்டியிடுகிறார். அவருக்கு பரிசுப்பெட்டி சின்னத்தில் வாக்குகள் கேட்டு கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று ஈரோடு குமலன்குட்டை பகுதியில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

மத்திய–மாநில அரசுகள் தமிழக மக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தி வருகின்றன. நடைபெறும் தேர்தலில் நாடாளுமன்ற தொகுதிகளுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் 8 தொகுதிகளிலாவது அ.தி.மு.க. கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கம்பெனியை மூடிவிட்டு செல்ல வேண்டியதுதான்.

தமிழக விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து உயர்மின் கோபுர எதிர்ப்பு விவசாயிகள் என்னை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கூறினார்கள். விவசாயிகளை நசுக்கும் இந்த திட்டத்தை எதிர்த்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளனர். பெண்கள் என்று கூட பார்க்காமல் 40 பேரை கைது செய்து இருக்கிறது இந்த அரசு.

நான் விவசாயி, விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்று கூறும் தமிழக முதல்–அமைச்சரும், இந்த பகுதி அமைச்சர்களும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காமல், அவர்களுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.

இது மத்திய அரசின் திட்டம் என்று கூறி ஒதுங்கிக்கொள்கிறார்கள். மத்திய அரசு ஏன்? விவசாயிகளை குறிவைத்து தாக்குகிறது. நமது பாரம்பரிய தொழில் விவசாயம். இந்த விவசாயத்தை ஒழித்து விட்டால், தமிழர்கள் இந்த மண்ணை விட்டு புலம்பெயர்ந்து விடுவார்கள் என்று கணக்கிடுகிறார்கள் மத்தியில் ஆளுகின்ற பா.ஜனதா கட்சியினர். அவர்களுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. எனவே அவர்கள் தமிழர்களை எப்படியாவது விரட்ட வேண்டும் என்று திட்டம்போடுகிறார்கள்.

மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். மேற்கு மண்டல விவசாயிகளுக்கு உயர் மின்கோபுரம் போன்ற திட்டங்களால் பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள். இதன் மூலம் விவசாய நிலங்களை பாழ்படுத்த திட்டமிடுகிறார்கள்.

மத்திய அரசின் திட்டங்கள், என்று மத்திய அரசின் கைக்கூலிகளாக இருக்கும் தமிழக அரசு, அவர்களின் ஏஜெண்டுகளாக செயல்படுகிறது.

கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதா அமைச்சர் பதவி கொடுத்தார். அவருக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, முதல்–அமைச்சர் பதவியையே கொடுத்தார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி, முதல்–அமைச்சர் பதவி கொடுத்தவருக்கே துரோகம் செய்தார். ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் வைக்கக்கூடாது என்றும், அவருக்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்றும் கூறி அம்மாவை இழிவுபடுத்தியவர்களோடு கூட்டணி வைத்து ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்து இருக்கிறார். அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் துரோகம் செய்து, தமிழக மக்களுக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா என்ன பேசினார் என்று நினைத்துப்பாருங்கள். நிர்வாக திறமையில் குஜராத்தை சேர்ந்த மோடியா? தமிழகத்தை சேர்ந்த இந்த லேடியா? யார் சிறந்தவர். என்று கேட்டு பிரசாரம் செய்தார். தமிழக மக்கள் லேடிதான் சிறந்தவர் என்று ஜெயலலிதாவையே தேர்ந்து எடுத்தனர். அப்படி அவர் கூட்டணி வைக்காத பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து, மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் ஏஜெண்டாக இருப்பவர்கள் இந்த மக்களுக்கு துரோகத்தை செய்கிறார்கள்.

பிரதமர் மோடியின் தவறான கொள்கைகளால் தமிழகத்தில் தொழில்கள் அழிந்து விட்டன. நெசவுத்தொழில், பின்னலாடை தொழில்கள் நசிவடைந்து விட்டன. எனவேதான் அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முறைசாரா தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வேலை இல்லாத பட்டதாரிகள் என்று அனைத்து தரப்பினருக்கும் முக்கியத்துவம் அளித்து இருக்கிறோம்.

சரக்கு மற்றும் சேவை வரியால் தமிழகத்தின் அனைத்து தொழில்களும் பாழ்பட்டு விட்டன. தி.மு.க.வினர் ராகுல்காந்தி பிரதமராக வருவார் என்று பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி இன்னும் ராகுல்காந்திதான் பிரதமர் என்று கூறவில்லை. எனவே தமிழகத்தில் வெற்றி பெற்று நாம் கூறுபவர்தான் பிரதமராக வருவார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் உண்மை தொண்டர்களாக, மக்களைத்தவிர வேறு யாருக்கும் அடிபணியாத உண்மை கட்சியாக இருப்பது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். இந்த கட்சியின் வேட்பாளர் செந்தில் குமாருக்கு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். அ.ம.மு.க. கட்சி அனைவருக்கும் பொதுவான கட்சி. இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம், ஒடுக்கப்பட்டவர்கள், ஏழை, பணக்காரர் என்று எந்த வேறுபாடும் இல்லாத கட்சி. அம்மாவின் உண்மை தொண்டர்களின் கட்சி.

இவ்வாறு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

டி.டி.வி. தினகரனை பார்க்க பிற்பகல் 3 மணி முதல் குமலன்குட்டை பகுதியில் ஏராளமானவர்கள் வந்து குவிந்தனர். அவர் சரியாக மாலை 4 மணிக்கு வந்து, திறந்த வேனில் நின்று பேசினார். பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூட்டத்துக்கு ஏராளமான ஆண்களும், பெண்களும் வந்து இருந்தனர்.

பின்னர் அவர் நசியனூரில் வாக்கு சேகரித்தார். அங்கிருந்து விஜயமங்கலம் புறப்பட்டு சென்றார்.


Next Story