இன்னும் 5 ஆண்டுகள் மோடி ஆட்சி நடத்தினால் நாடே இருக்காது ஈரோட்டில் வாக்கு சேகரித்து சீமான் பரபரப்பு பேச்சு


இன்னும் 5 ஆண்டுகள் மோடி ஆட்சி நடத்தினால் நாடே இருக்காது ஈரோட்டில் வாக்கு சேகரித்து சீமான் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 2 April 2019 5:00 AM IST (Updated: 2 April 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

‘இன்னும் 5 ஆண்டுகள் மோடி ஆட்சி நடத்தினால் நாடே இருக்காது’ என்று ஈரோட்டில் வாக்கு சேகரித்து சீமான் பரபரப்பாக பேசினார்.

ஈரோடு,

நாம் தமிழர் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு விவசாயி சின்னத்தில் வாக்குகள் கேட்டு நேற்று சீமான் பிரசாரம் செய்தார். இதற்கான பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்தது.

கூட்டத்தில் சீமான் பேசியதாவது:–

இந்த நாடு எத்தனையோ தேர்தல்களை கண்டு இருக்கிறது. ஆனால் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் காணவில்லை என்பதுதான் உண்மை. இதுவரை இருந்த அரசியல் கட்சிகளின் ஆட்சியை நம்பி வெம்பி ஏமாந்து போன தலைமுறையின் மக்களாக நாம் இருக்கிறோம். தி.மு.க.வுக்கு மாற்று அ.தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க., காங்கிரசுக்கு மாற்று பா.ஜ.க., பா.ஜ.க.வுக்கு மாற்று காங்கிரஸ் என்று இருக்கிறோம். வேறு வழியில்லாமல் நாம் தமிழர் என்ற புதிய அரசியல் பாதையை உருவாக்கி இருக்கிறோம். இது புரட்சிகர அரசியல் பாதை. அடிமைகளாக இருக்கும் மக்களின் அரசியல் உரிமை பாதை. இது இந்த மண்ணின் மக்களுக்கான, அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கான வாழ்க்கை பாதை.

இன்றைக்கு ஆளும் கட்சிகள் தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் உள்ளன. கேரளாவில் இருந்து கர்நாடகத்துக்கு கியாஸ் கொண்டு செல்லப்படுகிறது. இதை கொண்டு செல்லும் கியாஸ் குழாய் கேரளாவில் இருந்து தமிழகம் வரை தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. தமிழக எல்லையில் இருந்து கர்நாடகம் வரை மீண்டும் தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தமிழர்களின் நெஞ்சை கிழிப்பது போல நன்செய் வயல்களை கிழித்து போடப்படுகிறது.

தேர்தலையொட்டி பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் மளிகைக்கடைக்கும், ஆஸ்பத்திரி செலவுக்கும் பணம் கொண்டு செல்பவர்களைத்தான் பிடிப்பார்கள். அரசியல்வாதிகள் தொகுதிகளுக்குள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பிடிக்க மாட்டார்கள். இவர்கள் பறக்கும் படை அல்ல, பறிக்கும் படை.

பாலைவனமாக மாறும் நாட்டை காப்பாற்ற புரட்சி நடக்கும். நாளை தண்ணீர் இல்லாமல் குடத்தை தூக்கிக்கொண்டு அலையும்போது தெரியும்.

இது நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் நாம் தமிழர் ஆட்சியில் இருக்க வேண்டும். இல்லை என்றால் நீ புரட்சி என்று தொடங்கும்போது ஆட்சியாளர்கள் யாரும் இங்கே இருக்க மாட்டார்கள். அவர்கள் வேறு நாட்டுக்கு சென்று விடுவார்கள். மோடி ஏற்கனவே ஓடி ஓடி பயிற்சி செய்து வைத்து இருக்கிறார். நிரவ் மோடி, விஜய் மல்லையா போன்று அவரும் சென்று விடுவார். காசுக்கு ஓட்டுப்போட்டால் வறுமை ஒழிந்து விடுமா? ஓட்டுக்காக உங்களுக்கு கொடுக்கும் ரூ.500 வறுமையை போக்கி விடுமா? பொங்கலுக்கு ரே‌ஷனில் ரூ.1000 கொடுத்தனர். அந்தபக்கம் வாங்கி இந்தப்பக்கம் டாஸ்மாக் கடையில் கொடுத்தவர்களைத்தான் பார்க்க முடிந்தது.

இப்போது அரசியலில் தங்கள் வாரிசுகளை நட்டு வைக்கிறார்கள். தமிழகம் என்ன உங்கள் குடும்ப சொத்தா?.

தலாய்லாமா தனிநாடு கேட்டால் ஆதரிக்கும் இந்திய அரசு, பாகிஸ்தானை பிரித்து வங்காளதேசம் உருவாக்கிய இந்திய அரசு, பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் இந்திய அரசு, நாங்கள் தனி ஈழம் கேட்டால் மட்டும் ஏன் எதிர்க்கிறது?.

இந்த தேர்தலில் கை சின்னத்துக்கோ, தாமரை சின்னத்துக்கோ வாக்களிப்பவர்களின் மரபணுவை சோதனை செய்ய வேண்டும். 10 ஆண்டுகள் ஆகவில்லை. ஈழத்தில் சொந்தங்கள் கொலை செய்யப்பட்டு, அதை கடத்திக்கொண்டு சென்று விட்டார்கள். ஆந்திரத்தில் மரங்கள் வெட்டிய 20 பேரை சுட்டுக்கொன்றார்கள்?. அதை வெட்ட சொன்ன ஆந்திரக்காரர்களை ஏன் சுடவில்லை. இதை மு.க.ஸ்டாலின் கேட்பாரா?. தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்றார்களே இதற்கு பிரதமர் மோடி ஒரு சிறு வருத்தமாவது சொன்னாரா? 400 விவசாயிகள் இறந்தார்களே, மோடி தனது வருத்தத்தை பதிவு செய்தாரா? இல்லை ராகுல்காந்தி வருத்தம் தெரிவித்தாரா? ஆனால், நமது வாக்குகள் மட்டும் வேண்டும்.

ஜாதி, மத உணர்வை தூண்டி வாக்குகள் கேட்க வருகிறார்கள். இயற்கையை காக்க இவர்களுக்கு என்ன திட்டம் உள்ளது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் இதுவரை செய்யாததை இனி வரும் 5 ஆண்டுகளில் செய்யப்போகிறதா?.

கடந்த 5 ஆண்டுகள் இருந்து விட்டு ஆட்சியை விட்டு போகப்போகிற மோடி, இதுவரை செய்யாத எதை இனி 5 ஆண்டுகளில் செய்யப்போகிறார். மோடி மீண்டும் பிரதமரானால் 5 ஆண்டுகளில் நாடே இருக்காது. முடித்து விடுவார்.

நான் ஓட்டுக்கேட்கப்போவதில்லை. ஓட்டு எனக்கு போட்டால் போடுங்கள் இல்லாவிட்டால் போங்கள். ஆனால் நாட்டுக்காக போராட வேண்டிய கடமை எனக்கு உள்ளது. எனது தாய் தந்தை, மனைவி குழந்தையை விட இந்த நாட்டின் மீது எனக்கு பேரன்பு உள்ளது. அடிமை இனத்தின் விடுதலை என்ற புனித பணி எனக்கு உள்ளது.

எந்த இனத்தவராக இருந்தாலும் நம்மோடு வாழலாம். ஆனால் நம்மை ஆழ நினைக்கக்கூடாது. பச்சைத்தமிழனாக மாறிவிட்டேன் என்று சொந்த இனத்துக்கே துரோகம் செய்பவர்கள், வந்த இனத்துக்கு துரோகம் செய்வார்கள். எனவே வஞ்சகத்தையும்,, ஏமாற்றுபவர்களையும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

பசிக்கு தினமும் சோறு சாப்பிடுபவர்கள் விவசாயியை நினைத்துப்பார்க்க வேண்டும். எத்தனை கசக்கி பிழிந்தாலும் இனிக்கும் பண்புடைய கரும்பை போன்ற விவசாயியை நினைக்கும் வகையில் நாம் தமிழர் கட்சிக்கு 2 கரும்புகளுடன் கூடிய விவசாயி சின்னம் இருக்கிறது. விவசாயி ஜெயிக்க வேண்டும். விவசாயி தோற்றான் என்ற நிலை வரக்கூடாது. எனவே சாப்பிடுகின்ற அனைவரும் விவசாயிக்கு நன்றி உணர்ச்சியுடன் வாக்களிக்க வேண்டும். விவசாயிக்கு வாக்களிக்காதவர்கள் சாப்பிடுவதை விட்டு விடுங்கள். நாம் தமிழர் கட்சியில் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் சீதாலட்சுமிக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

முன்னதாக சமர்ப்பா இசைக்குழு குமரனின் தமிழ் இசை பாடல் நிகழ்ச்சி நடந்தது.


Next Story