3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 1 April 2019 10:45 PM GMT (Updated: 1 April 2019 8:41 PM GMT)

3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து, திண்டுக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல், 

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கேபிள் பராமரிப்பு, பாதுகாப்பு, உதவியாளர் உள்ளிட்ட பணிகளில் ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. எனவே, சம்பளம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நேற்று பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 135 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் திண்டுக்கல், பழனி, வத்தலக்குண்டு, வேடசந்தூர் பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். நேற்று இவர்கள் அனைவரும் திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு திரண்டு வந்து சம்பளம் வழங்காததை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் திண்டுக்கல் நிர்வாகி ஜான்போர்ஜியா தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநில நிர்வாகி பழனிக் குமார், திண்டுக்கல் கிளை தலைவர் சுமதி, செயலாளர் ஆரோக்கியம், உதவி செயலாளர் அய்யனார்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் மதியம் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனர். இதையடுத்து உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். அதேநேரம் ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் கேபிள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. 

Next Story