கரூர் அருகே வாகன சோதனை: காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் பறிமுதல்


கரூர் அருகே வாகன சோதனை: காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 2 April 2019 4:30 AM IST (Updated: 2 April 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே வாகன சோதனையில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர்,

நாடாளுமன்ற தொகுதிக்கு வருகிற 18-ந்தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. இதையொட்டி 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரத்தையும், தங்களது சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் அல்லது விலையுயர்ந்த பரிசுபொருட்கள் பட்டுவாடா செய்யப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க கரூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குழுவாக பிரிந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக கரூர் அருகேயுள்ள சுக்காலியூர் சோதனைசாவடி பகுதியில், நேற்று கூட்டுறவு சார்பதிவாளர் ரமேஷ் தலைமையில், நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.5 லட்சம் இருந்தது தெரியவந்தது. பின்னர் காரில் இருந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் கரூர் அண்ணா நகரை சேர்ந்த தொழிலதிபர் அருண் (வயது 32) என்பதும், அவரது மனைவி நாமக்கல் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் மருத்துவம் படிப்பதால், படிப்பு செலவு கட்டணமாக செலுத்த அந்த பணத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது. இருப்பினும் ரூ.5 லட்சத்திற்கான எந்த ஆவணமும், அருணிடம் இல்லை. இதை யடுத்து அந்த குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து, கரூர் சட்டமன்றத்தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சரவணமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். 

Next Story