குடிநீர்கேட்டு பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர்கேட்டு பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 1 April 2019 10:30 PM GMT (Updated: 1 April 2019 8:54 PM GMT)

கரூர் மாவட்டம், வாழ்வார்மங்கலம் ஊராட்சி, சின்னமநாயக்கன்பட்டியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

தரகம்பட்டி,

கரூர் மாவட்டம், வாழ்வார்மங்கலம் ஊராட்சி, சின்னமநாயக்கன்பட்டியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு தொட்டியில் குடிநீர் நிரப்பி வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது வறட்சியின் காரணமாக வாழ்வார்மங்கலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஒருவாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதி காரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று வாழ்வார்மங்கலம் ஒத்தக்கடையில் உள்ள பாளையம்-திருச்சி சாலையில் மறியல் செய்தனர். இதுகுறித்து அறிந்த சிந்தாமணிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அற்புதராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்தமறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story