தாராபுரம் அருகே குடிநீர் கேட்டு 28 கிராமங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு


தாராபுரம் அருகே குடிநீர் கேட்டு 28 கிராமங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு
x
தினத்தந்தி 2 April 2019 4:15 AM IST (Updated: 2 April 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே குடிநீர் கேட்டு 28 கிராமங்களில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் முடிவு செய்துள்ளனர்.

தாராபுரம்,

தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொப்பம்பட்டி, கெத்தல்ரேவ் ஆகிய ஊராட்சிகளில் மொத்தம் 28 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு அமராவதி ஆற்றில் சுண்ணாம்புக்காடு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குடிநீர் வடிகால் வாரியம் அமராவதி குடிநீர் திட்டத்தை நிறுத்திவிட்டு, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டது. அமராவதி குடிநீர் திட்டத்தை நிறுத்துவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காவிரி குடிநீர் திட்டத்தில் தான் குடிநீர் வழங்க முடியும் என்று அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

இந்த நிலையில் தொப்பம்பட்டி மற்றும் கெத்தல்ரேவ் ஆகிய ஊராட்சிகளுக்கு கடந்த ஒரு மாதமாக இந்த 2 திட்டங்களிலும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதையடுத்து இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட 28 கிராமங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். எனவே குடிநீர் தட்டுபாட்டை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை 28 கிராம மக்களும் புறக்கணிக்க போவதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் அதிகாரிகள் யாரும் பொது மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாததால், நேற்று அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி காலிக்குடங்களுடன் போராட்டத்தை தொடங்கினார்கள்.

இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கூறியதாவது:–

கடந்த ஒரு மாதமாக எங்கள் பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். இந்த பகுதியில் நிலத்தடி நீர் மிகவும் உப்புநீராக இருப்பதால், நிலத்தடி நீரை கால்நடைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. தினமும் பல கிலோ மீட்டர் தொலைவு சென்று குடிநீர் கொண்டு வருகிறோம்.

தொப்பம்பட்டி, கெத்தல்ரேவ் ஆகிய ஊராட்சிகளுக்கு அமராவதி சுண்ணாம்புக்காடு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தான் குடிநீர் வழங்க வேண்டும். காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் எங்கள் பகுதிக்கு தேவையில்லை. காரணம் ஏற்கனவே இந்த திட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அப்படியிருந்தும் எங்கள் கோரிக்கையை ஏற்காததால், 2 ஊராட்சிகளிலும் உள்ள 28 கிராமங்களில் கருப்பு கொடிகளை ஏற்றி, காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த நிலையில் தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மடத்துப்பாளையம் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் தாராபுரம்–பூளாவடி சாலையில், நின்று கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் வீடுகளில் ஏற்றப்பட்டுள்ள கருப்பு கொடிகளை அகற்றிவிட்டு, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதற்கு விரைவில் குடிநீர் வழங்கினால் தேர்தல் புறக்கணிப்பு கைவிடப்படும் இல்லையேல் கண்டிப்பாக தேர்தல் புறக்கணிப்பு நடக்கும் என்றும் கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குடிநீர் கேட்டு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story