அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள்


அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 April 2019 4:15 AM IST (Updated: 2 April 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சியினர் முழுமையாக பின்பற்ற வேண்டும் என கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பேசினார்.

திருப்பூர்,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் மாணிக்குர்‌ஷல், செலவின பொதுப்பார்வையாளர்கள் சவுமியா ஜித்தாஸ் குப்தா (பெருந்துறை, பவானி, அந்தியூர்) மற்றும் சிட்னி டி சில்வா (திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோபிசெட்டிபாளையம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது:–

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் கடமையாகும். நாடாளுமன்ற தேர்தலின் போது ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.70 லட்சம் வரை செலவு செய்யலாம். ஒவ்வொரு வேட்பாளருக்கும் தேர்தல் செலவின கணக்குகளை பதிவு செய்வதற்காக ஒரு பதிவேடு வழங்கப்பட்டுள்ளது. இந்த பதிவேட்டை முறையாக பராமரித்து தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் உள்ள கணக்கு பிரிவில் உரிய இடைவெளியில் காண்பிக்க வேண்டும்.

நகர்ப்புறங்களில் எந்தவொரு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டுவது போன்ற விளம்பரங்கள் செய்யக்கூடாது. கிராமப்பகுதிகளில் தனியார் கட்டிடங்களில் கட்டிட உரிமையாளரின் எழுத்து பூர்வமான அனுமதியுடன் விளம்பரம் செய்யலாம். பொதுக்கூட்டங்கள், பேரணிகள் போன்றவை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்தின் சுவிதா இணையதளத்தின் மூலமாக 48 மணி நேரத்திற்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பரிசீலனைக்கு பிறகு அனுமதி வழங்கப்படும்.

பிரசார வாகனங்களுக்கான அனுமதி தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் வழங்கப்படும். விருந்தினர் மாளிகை மற்றும் அரசு தங்கும் விடுதிகளை பிரசாரத்திற்கோ அரசியல் நடவடிக்கைகளுக்கோ பயன்படுத்த கூடாது. வாக்காளர்களுக்கு வழங்கும் அடையாள துண்டு சீட்டு வெள்ளை நிறத்தில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அதில் கட்சி சின்னம், வேட்பாளர் பெயர், கட்சியின் பெயர் இடம் பெற்றிருக்க கூடாது. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் சுற்றளவிற்குள் சுவரொட்டிகள் ஒட்டுவது, துண்டு பிரசுரங்கள் மற்றும் அடையாள சீட்டுகள் வினியோகம் போன்ற செயல்களை செய்யக்கூடாது.

தேர்தல் விதிமீறல் தொடர்பாக சி–விஜில் செல்போன் செயலி மூலமாக பொதுமக்கள் புகார் செய்யலாம். இந்த செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் விதிமீறலை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அனுப்பலாம். இந்த புகார்கள் மீது 1 மணி நேரம் 40 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலின் போது வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும்.

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட உள்ள வாக்காளர் சீட்டுகளை வாக்காளரின் பாகம் எண், தொடர் எண் போன்றவற்றை விரைவில் அறிந்துகொள்வதற்கான ஆவணமாக மட்டுமே பயன்படுத்த முடியும். இதனை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியாது. 1950 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு வாக்காளர்கள் தங்களது பெயர் இடம், பெற்றுள்ள பாகம் எண், தொடர் எண், வாக்குச்சாவடி அமைவிடம் போன்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அனைத்து தேர்தல் விதிமுறைகளையும் அனைத்து அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கடைபிடித்து அமைதியான முறையில் தேர்தல் நடத்த தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story