கல்வி சீர்வரிசை கொண்டுவந்த பெற்றோர்களுக்கு ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்பு
ராமநாதபுரத்தில் பள்ளி ஐம்பெரும் விழாவுக்கு கல்விச் சீர்வரிசை கொண்டு வந்த பெற்றோர்கள், முன்னாள் மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா, திறன் வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) திறப்பு விழா, பள்ளி ஆண்டு விழா, மாணவர் சேர்க்கை விழா, விளையாட்டு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது. முன்னதாக கல்விச் சீர் வழங்கும் விழா நடந்தது.
இதையொட்டி கேணிக்கரை ரோட்டில் இருந்து மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் கல்விச் சீரோடு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் பள்ளி வந்ததும் ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்தும், பன்னீர் தெளித்தும் வரவேற்றனர். பின்னர் பள்ளியில் 1988–ம் ஆண்டு படித்த மாணவர்கள் சர்புதீன், நூருல் அமீன், செந்தில்குமார், முத்து முகமது, பசீர் அகமது, ரமேஷ் ஆகியோர் சார்பில் திறன் வகுப்பறை, கல்வி சீர்வரிசை பொருட்கள் ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரேமிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திறன் வகுப்பறை திறக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது.
மேலும் மாணவர்கள் சேர்க்கையும் தொடங்கப்பட்டது. விளையாட்டு விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டு விழாவில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்கள், பெற்றோர்களை வெகுவாக கவர்ந்தன.விழாக்களில் தலைமை ஆசிரியர் எஸ்தர் வேணி, உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், வட்டாரக் கல்வி மேற்பார்வையாளர் விமலா ரமணி, ஆசிரியர் பயிற்றுநர்கள் தேவி உலக ராஜ், சித்ரா தேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.