மனிதநேயத்தோடு மனிதன் வாழ திருக்குறளை கற்க வேண்டும் குன்றக்குடி அடிகளார் பேச்சு

மனிதநேயத்தோடு மனிதன் வாழ திருக்குறளை கற்க வேண்டும் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள ஸ்ரீ ராஜராஜன் என்ஜினீயரிங் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் ஹயாசிந்த் சுகந்தி ஆண்டறிக்கை வாசித்து வரவேற்றார். இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– சமூகத்தின் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க வல்ல ஒரே வழி கல்வி தான்.
இன்றைய தலைமுறை அதன் வழி நடக்கிறதாக என்றால், அது சிந்தனைக்குரியதாக இருக்கிறது. அனுபவித்து தெரிந்து கொள்ளும் பாதையின் வழியை, பயணத்தை அறிவின் ஒளி நமக்கு காட்டுகிறது. இந்த தேசத்தை வழிநடத்த பண்புமிக்க தலைமுறையை உருவாக்க வேண்டும்.
நாட்டுப்பற்று உள்ள தலைவர்கள் மனிதகுலத்தை நேசித்து மனித குலத்திற்காக கல்வியைப் பெற்று தந்து அதன் சிறப்புக்கு வழிவகுத்தனர். அவர்களை இன்றைய தலைமுறையினர் அறிந்து பின்பற்ற வேண்டும். சொல்லுக்கும் எழுத்துக்கும் இலக்கணம் பேசியதில்லை, தமிழ்மொழி நம் வாழ்க்கைக்கும் இலக்கணம் பேசியது. அதனாலேயே கடந்த காலத்தில் அடிமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டிருந்த தமிழ் மொழி, இன்று செம்மொழி சிம்மாசனம் ஏறி அமர்ந்து உள்ளது.
இந்த பெருமைக்கு பாடுபட்டவர்களை நாம் நினைவு கூறுவதோடு நமது பண்பாட்டுத் தளத்தை பாதுகாக்க உறுதியாக இருக்க வேண்டும். மனிதநேயத்தோடு மனிதன் வாழ வேண்டுமானால் அவசியம் திருக்குறளை கற்க வேண்டும். எந்த சமயத்தின் அடையாளத்தையும் தன்னுள் நிறுத்தாமல் எவருக்கும் துதிபாடாமல் உலக மானிடம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே உருவான நூல் திருக்குறள். பட்டம் பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வியின் மூலம் பெற்றதை சமூகத்திற்கும், நாட்டுக்கும் பயன்படுத்த வேண்டும். மனித குலம் மேன்மையடைய பாடுபட வேண்டும். இவ்வாறு பேசினார்.






