டிரான்ஸ்பார்மர் பழுதை சரிசெய்யக்கோரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்


டிரான்ஸ்பார்மர் பழுதை சரிசெய்யக்கோரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
x
தினத்தந்தி 1 April 2019 10:30 PM GMT (Updated: 1 April 2019 10:16 PM GMT)

டிரான்ஸ்பார்மர் பழுதை சரிசெய்யக்கோரி மின்வாரிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் சென்று பெண்கள் முற்றுகையிட்டனர்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே உள்ளது பனிக்கனேந்தல் கிராமம். இங்கு 300–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மானாமதுரை துணை மின்நிலையத்தில் இருந்து இந்த கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு தனி டிரான்ஸ்பார்மரும், விவசாய இணைப்பு மற்றும் குடிநீர் தொட்டிகளுக்கு என தனி டிரான்ஸ்பார்மரும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விவசாய இணைப்பு மற்றும் தண்ணீர் தொட்டிகளுக்கு செல்லும் டிரான்ஸ்பார்மர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பழுதானது.

இதுகுறித்து கிராமமக்கள் மானாமதுரை மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தனர். ஆனால் அதிகாரிகள் அதை கண்டு கொள்ளாததால், ஒரு மாதமாக குடிநீர் மோட்டார் இயக்காமலும், விவசாய கிணறுகளில் உள்ள மோட்டார்களும் செயல்படாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் இல்லாததால் கடந்த ஒரு மாத காலமாக அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், இன்று 100–க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள உதவி மின்பொறியாளர் ஜெயபாண்டியம்மாளை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வருவாய் துறையினர், போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதையடுத்து சுமார் 2 மணி நேரமாக நடந்த முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து உதவி மின்பொறியாளர் கூறும்போது, புதிய டிரான்ஸ்பார்மர் இருப்பு இல்லை, எனவே வேறு டிரான்ஸ்பார்மரை தயார் செய்து கொண்டு செல்ல இருந்தது, அதற்குள் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர் என்றார்.


Next Story