நாட்டு மக்களை நேசிப்பதற்கு சாட்சியாக ராகுல்காந்தி வடநாட்டிலும், வயநாட்டிலும் போட்டியிடுகிறார் ப.சிதம்பரம் பேச்சு


நாட்டு மக்களை நேசிப்பதற்கு சாட்சியாக ராகுல்காந்தி வடநாட்டிலும், வயநாட்டிலும் போட்டியிடுகிறார் ப.சிதம்பரம் பேச்சு
x
தினத்தந்தி 1 April 2019 11:30 PM GMT (Updated: 1 April 2019 10:16 PM GMT)

ராகுல்காந்தி வடநாட்டிலும், வயநாட்டிலும் போட்டியிடுவது காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களை நேசிப்பதற்கு சாட்சியாக உள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

சிவகங்கை,

சிவகங்கை நகர் ஒன்றிய தி.மு.க. கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் பெரிகருப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:– தமிழகத்தில் தி.மு.க. சார்பில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே பலம் வாய்ந்தவை. பெரியார் முதலில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவராக இருந்தார். அதுபோல அவர் தி.க. தலைவராகவும் இருந்தார். பின்னர்அதில் இருந்து தான் தி.மு.க தோன்றியது.

நம்முடைய இன ஒற்றுமையை எந்த சக்தியும் பிரிக்காதவாறு பாதுகாக்க வேண்டும். சாதி ஏற்ற தாழ்வு இருப்பது தான் சமுதாயத்திற்கு நல்லது என்று காவி உடை அணிந்தவர்கள் நினைக்கின்றனர். இது இந்தியாவிற்கு பெரும் கேடு, தமிழகத்தில் இது முளைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

கடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி சொன்னதை செய்யவில்லை. சொன்னதை செய்தால் பாராட்டலாம். செய்யவில்லை என்றால் மன்னிக்கலாம். ஆனால் சொல்லாததை செய்தால் மன்னிக்கவே முடியாது.

ஒரேநாள் இரவில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று கூறினார்கள். நம்முடைய பணத்தை எடுக்கவும், மாற்றவும் 2 மாதம் அலைந்தோம், அது நினைவில் உள்ளதென்றால், அதற்கு மிக பெரிய தண்டனையை தர வேண்டும்.

ராகுல்காந்தி வடநாட்டிலும் போட்டியிடுகிறார், வயநாட்டிலும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி இந்திய மக்களை எப்படி நேசிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில நாட்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஸ்டாலின் முதல்–அமைச்சராவார். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், சட்டசபை எதிர்கட்சி தலைவர் ராமசாமி, முன்னாள் அமைச்சர் தென்னவன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜசேகரன், குணசேகரன், மனோகரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கண்ணகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வீரபாண்டி, திருமொழி, சங்கு, உதயகுமார், சேக்பக்ரூதீன், ஜமருல்கமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story