தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்மூலம் 2–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை ரூ.2¼ கோடி வருமானம்


தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்மூலம் 2–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை ரூ.2¼ கோடி வருமானம்
x
தினத்தந்தி 1 April 2019 10:30 PM GMT (Updated: 1 April 2019 10:27 PM GMT)

மதுரை–சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரு மார்க்கங்களிலும் பயணிகள் போக்குவரத்து மூலம் கடந்த 2–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை சுமார் ரூ.2¼ கோடி வருமானமாக கிடைத்துள்ளது.

மதுரை,

மதுரையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் 1–ந் தேதி முதல் தேஜஸ் சொகுசு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் குளிரூட்டப்பட்ட உட்காரும் இருக்கை வசதி கொண்ட சேர்கார், எக்சிகியூடிவ் இருக்கை வசதி என 2 வகுப்புகள் உள்ளன. இதில், சேர்கார் என்று சொல்லப்படும் பெட்டிகளில் மதுரையில் இருந்து சென்னை செல்ல உணவு இல்லாமல் ரூ.895, எக்சிகியூடிவ் வகுப்பில் ரூ.1,940 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த ரெயிலுக்கு பயணிகளிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரு மார்க்கங்களிலும் ரெயிலின் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்படுகிறது. மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 9.30 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தடைகிறது. இந்த ரெயில் திருச்சி மற்றும் கொடைரோடு ஆகிய ரெயில்நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். தேஜஸ் ரெயில் வருகைக்கு பின்னர், மதுரை–சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், குருவாயூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேஜஸ் ரெயிலுக்கு பயணிகளிடம் தனி வரவேற்பு இருப்பது தெரியவந்துள்ளது.

வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சேர்கார் வகுப்புக்கு ரூ.665 கட்டணமாகவும், குருவாயூர்–சென்னை எக்ஸ்பிரசில் 3–அடுக்கு குளிரூட்டப்பட்ட படுக்கை வசதி பெட்டியில் ரூ.765, 2–அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் ரூ.1,100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கடந்த 2–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை மதுரை–சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில்(வ.எண்.12636) சேர்கார் வகுப்பில் 4,787 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.27 லட்சத்து 62 ஆயிரத்து 406 வருமானமாக கிடைத்துள்ளது. குருவாயூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில்(வ.எண்.16128) மதுரையில் இருந்து சென்னை வரை 3–அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் 4,743 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இதன் மூலம் ரூ.33லட்சத்து 7 ஆயிரத்து 202 வருமானமாகவும், 2–அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் 1,562 பயணிகளும், அதன்மூலம் ரூ.14 லட்சத்து 87 ஆயிரத்து 941 வருமானமாக கிடைத்துள்ளது. அதேகால கட்டத்தில், தேஜஸ் எக்ஸ்பிரசில், சேர்கார் பெட்டியில் 11,315 பேர் பயணித்து ஒரு கோடியே 8 லட்சத்து 4 ஆயிரத்து 384 ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது.

எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டிகளில் 842 பேர் பயணித்து ரூ.16 லட்சத்து 42 ஆயிரத்து 74 வருமானமாகவும் கிடைத்துள்ளது. மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து மதுரை வந்த ரெயிலில் 2 வகுப்புகளிலும் 10,475 பயணிகள் மூலம் ரூ.98 லட்சத்து 67 ஆயிரத்து 695 வருமானமாக கிடைத்துள்ளது. ஆக இரு மார்க்கங்களிலும் ரூ.2 கோடியே 23 லட்சத்து 14 ஆயிரத்து 153 வருமானமாக கிடைத்துள்ளது.

தேஜஸ் ரெயிலை விழுப்புரம் மற்றும் தாம்பரம் ஆகிய ரெயில்நிலையங்களில் நிறுத்த வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் புறநகர் பகுதிகளில் இருப்பவர்களுக்கு தாம்பரம் ரெயில்நிலையம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. எனவே, தாம்பரம் ரெயில்நிலையத்தில் இரு மார்க்கங்களிலும் தேஜஸ் ரெயில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story