“மது விருந்து கொடுக்கும் பழக்கத்தை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

மது விருந்து கொடுக்கும் பழக்கத்தை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை,
தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அரசு இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்கிறது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பல்வேறு குற்றங்கள் அதிகரித்துள்ளன. மதுவினால் பாதிக்கப்படுவோருக்காக செயல்படும் தனியார் மறுவாழ்வு மையங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இதைத் தடுக்க, தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளுடன் இணைந்த ஆஸ்பத்திரிகள் உள்பட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மது போதை மீட்பு மையங்கள் அமைக்கவும், வருடத்திற்கு ஒருமுறை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் மது போதை மீட்பு முகாம்கள் நடத்தவும் உத்தரவிட வேண்டும். கோர்ட்டு இருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் புதிய மதுக்கடை திறக்கவோ, இடமாற்றம் செய்யவோ தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.
இதேபோன்று புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த 2 மனுக்களும் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது நீதிபதிகள், ‘‘மதுவினால் உயிரிழப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. அனைத்து சமூக விரோத செயல்களுக்கும், மதுபானம் தான் மிக முக்கிய காரணமாக உள்ளது. இதனால் தான் பாலியல் கொடூரங்களும் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுவதற்கும் மதுபானம் முக்கிய காரணமாக உள்ளது.
தரமற்ற மதுவை விற்பதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் மது அருந்துபவர்களுக்கு உடல் நலக்குறைபாடு ஏற்படுகிறது. அவர்களின் உழைக்கும் திறனும், மனநலமும் குறைகிறது. தற்போது திருமணம் மற்றும் விழாக்கள் என்றாலே மது விருந்து உள்ளதா என கேட்கும் பழக்கம் உள்ளது. மது விருந்து வழங்கும் பழக்கத்தை சமுதாயத்தின் நலன் கருதி இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இளம் வக்கீல்கள், தங்களின் நண்பர்களுக்கு மது விருந்து வழங்குவதை தவிர்த்து அனைவருக்கும் முன்னோடியாக விளங்க வேண்டும்’’ என்றனர்.
முடிவில், இந்த வழக்குகளை வருகிற 8–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.






