சாட்சியை மிரட்டிய வழக்கில் ஷயான், மனோஜ் கோர்ட்டில் ஆஜர்


சாட்சியை மிரட்டிய வழக்கில் ஷயான், மனோஜ் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 1 April 2019 11:00 PM GMT (Updated: 1 April 2019 10:44 PM GMT)

சாட்சியை மிரட்டிய வழக்கில் ஷயான், மனோஜ் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஷயான், மனோஜ் ஆகியோர் கொலை சம்பவம் நடந்தபோது, ஊட்டியில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். இந்த விடுதியின் உரிமையாளர் சாந்தாவை போலீசார் கோடநாடு வழக்கில் சாட்சியாக சேர்த்து உள்ளனர். இதற்கிடையே தன்னை ஷயான், மனோஜ் ஆகியோர் மிரட்டியதாக சாந்தா ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஷயான், மனோஜ் ஆகியோர் மீது தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு ஊட்டியில் உள்ள குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று கோர்ட்டில் குற்றவியல் நடுவர் செந்தில்குமார் ராஜவேல் முன்னிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து வந்து ஷயான், மனோஜை போலீசார் ஆஜர்படுத்தினர். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஷயான் கைது செய்யப்பட்டு உள்ளதால், இந்த வழக்கு 15 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து ஷயான், மனோஜ் ஆகியோரை போலீசார் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

Next Story