படப்பிடிப்பின் போது கியாஸ் சிலிண்டர் வெடித்து தாய், மகள் சாவு: தலைமறைவாக இருந்த உதவி இயக்குனர் கைது


படப்பிடிப்பின் போது கியாஸ் சிலிண்டர் வெடித்து தாய், மகள் சாவு: தலைமறைவாக இருந்த உதவி இயக்குனர் கைது
x
தினத்தந்தி 2 April 2019 10:45 PM GMT (Updated: 2 April 2019 7:29 PM GMT)

பெங்களூருவில் படப்பிடிப்பின் போது கியாஸ் சிலிண்டர் வெடித்து தாய், மகள் பலியான வழக்கில் தலைமறைவாக இருந்த உதவி இயக்குனரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தயாரிப்பாளர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பெங்களூரு,

கன்னட திரையுலகில் பிரபல நடிகர்களாக இருந்து வருபவர்கள் சிரஞ்சீவி சர்ஜா மற்றும் சேத்தன். இவர்கள் 2 பேரும் இணைந்து ரனம் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படிப்பிடிப்பு பெங்களூரு பாகலூர் அருகே கடந்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி நடந்தது. அப்போது சண்டை காட்சிக்காக பயன்படுத்திய ‘ஏர் கம்பரசர்’ கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், எலகங்கா பாபாநகரை சேர்ந்த தப்ரேஷ்கானின் மனைவி சுமைரா பானு, மகள் அகீரா பானு ஆகியோர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடந்ததும், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக தான் கியாஸ் சிலிண்டர் வெடித்து தாய், மகள் பலியானதும் தெரியவந்தது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் சமுத்திரம், தயாரிப்பாளர் சீனிவாஸ், விஜயன் உள்ளிட்டோர் மீது பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அனைவரும் தலைமறைவாக இருந்து வருகிறார்கள்.

இதற்கிடையில், சுமைராபானு, அகீரா பானு ஆகியோரின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி தப்ரேஷ்கான், அவரது குடும்பத்தினர் சம்பவம் நடந்த பாகலூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தப்ரேஷ்கானின் உறவினர்கள் 4 பேர், அங்குள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி கீழே இறக்கினார்கள். இதையடுத்து, தலைமறைவாக உள்ள இயக்குனர், தயாரிப்பாளர்களை கைது செய்ய 3 தனிப்படை அமைத்து துணை போலீஸ் கமிஷனர் கலா கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ரனம் படத்தின் உதவி இயக்குனர் சுபாஷ் (வயது 55) என்பவரை பாகலூர் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தலைமறைவாக உள்ள சீனிவாஸ், சமுத்திரம், விஜயன் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story