சென்னையில் வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்கள் குலுக்கல் முறையில் தேர்வு


சென்னையில் வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்கள் குலுக்கல் முறையில் தேர்வு
x
தினத்தந்தி 3 April 2019 5:00 AM IST (Updated: 3 April 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசு துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து 20 ஆயிரத்து 271 பேர் வாக்குச்சாவடி அலுவலர்களாக தேர்தல் ஆணையத்தால் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த மாதம்(மார்ச்) 24-ந்தேதி நடைபெற்றது.

இந்தநிலையில் வாக்குச்சாவடிகளுக்கு அலுவலர்களை குலுக்கல் முறையில் பிரிக்கும் பணி நேற்று பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கோ.பிரகாஷ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர்கள் டாக்டர் ஷாம்லா இக்பால், சுதிர் ராஜ்பால், ககன்தீப் சிங் ப்ரார், ரஜித் புன்ஹானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்ற வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களை கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர்.

பின்னர் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள்

சென்னை மாவட்டத்தில் 67 ஆயிரத்து 727 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 77 சதவீதம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். சென்னையில் உள்ள தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் 4 பொது பார்வையாளர்கள், 2 போலீஸ் பார்வையாளர்கள் மற்றும் 7 செலவின பார்வையாளர்கள் வந்துள்ளனர்.

எந்த சட்டமன்ற தொகுதிக்கு எந்த அலுவலர்கள் செல்வார்கள்? என்று கம்ப்யூட்டர் வைத்து குலுக்கல் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இந்த அலுவலர்கள் எந்த வாக்குச்சாவடிக்கு செல்வார்கள் என்று வருகிற 17-ந்தேதி தான் தெரியவரும். இதைப்போல் சென்னை மாவட்டத்துக்கு கூடுதலாக 1,400 வாக்குப்பதிவு எந்திரங்களை தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேட்டிருந்தோம். இந்த 1,400 வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.

ரூ.7 கோடி

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து, 144 பறக்கும் படைகள், 33 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 48 நிலையான இடத்தில் இருந்து கண்காணிக்கும் குழுக்கள் மற்றும் 17 செலவின கணக்கிடும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சுவர் விளம்பரங்கள், ‘டிஜிட்டல் பேனர்கள்’ உள்ளிட்டவை தொடர்பாக 66 புகார்கள் பதியப்பட்டுள்ளது. இதில் 52 புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பறக்கும் படையினர் ரூ.7 கோடி ரொக்கமும், ரூ.40 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் பணியாளர்களுக்கு இன்னும் 3 கட்ட பயிற்சி வகுப்பு நடத்த உள்ளோம். சென்னையில் பல்வேறு வகையான 7 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் லலிதா, துணை கமிஷனர்கள் கோவிந்தராவ், மதுசுதன்ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story