வலிமையான இந்தியா உருவாக மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு


வலிமையான இந்தியா உருவாக மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 2 April 2019 11:15 PM GMT (Updated: 2 April 2019 8:42 PM GMT)

வலிமையான இந்தியா உருவாக மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பி.கே.புதூர், பாறைக்கொட்டாய், மாரியம்பட்டி, கெட்டுஅள்ளி, ஈச்சம்பள்ளம், கருப்பையனஅள்ளி அனுமந்தபுரம், தாமரை ஏரி, மல்லாபுரம், ஆண்டியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பிரசார கூட்டங்கள் நடைபெற்றது.

இந்த கூட்டங்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், பா.ம.க. மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஷ்வரன், மாநில நிர்வாகி பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியண்ணன் வரவேற்றார்.

இந்த பிரசார கூட்டங்களில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது:-

இந்தியாவின் இறையாண்மையையும், பாதுகாப்பையும் உறுதிபடுத்திட நிலையான பிரதமர் தேவை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. குறிப்பாக நாட்டின் பாதுகாப்பு துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் இந்தியாவின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. வலிமையான இந்தியா உருவாக மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே பிரதமர் வேட்பாளர் யார்? என்பதில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. வட மாநிலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் கனவில் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த அரசு எப்போது கவிழும் என்று எதிர்பார்த்த எதிர்கட்சிகளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும், விவசாயத்தை வளம்கொழிக்க செய்யவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காவிரி ஆற்றின் உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் நிறைவேற்றுவார்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Next Story