மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேச்சு


மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேச்சு
x
தினத்தந்தி 3 April 2019 4:00 AM IST (Updated: 3 April 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சங்கரப்பேரியில் நேற்று மதியம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் நேற்று மதியம் 2 மணி அளவில் தூத்துக்குடிக்கு வந்தார். அவருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், கூட்டணி கட்சியினர் உள்ளிட்டவர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுக்கூட்ட மேடை முன்பு திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் அமித்ஷா பேசியதாவது:-

பாரத ரத்னா மறைந்த எம்.ஜி.ஆர், தமிழகத்தில் ஏழை- எளிய மக்களுக்காக சிறப்பாக ஆட்சி நடத்திய மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை நினைத்து எனது உரையை தொடங்குகிறேன்.

புலவாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்கள் சுப்பிரமணியன், சிவசந்திரன், பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழகத்தை சேர்ந்த வீரர் அபினந்தன் ஆகியோரை நினைத்து எனது உரையை தொடங்குகிறேன். தெய்வ அருள் பொருந்திய முருக கடவுளை நினைத்து எனது உரையை தொடங்குகிறேன்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். அவருக்கு கூட்டணி கட்சிகளின் ஆசி இருக்கிறது. எனவே அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் ஏழை, எளிய மக்களுக்காக கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நடத்தியுள்ளார். அந்த ஆட்சி மீண்டும் தொடர வேண்டும். ஏழை மக்களுக்கான ஆட்சி மீண்டும் வர வேண்டும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா கட்சிக்கு இந்த அளவுக்கு பெரிய கூட்டணி அமையவில்லை. இருந்தாலும் தமிழகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தமிழக மக்கள் எங்களை புறக்கணித்தாலும் தமிழக மக்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை. அதனால் தான் தமிழகத்தில் 2 மந்திரிகளை கொடுத்தோம். ஒருவர் நிர்மலாசீதாராமன். மற்றொருவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. தென் மாநிலங்களை புறக்கணித்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள். அது தவறானது. தென் மாநிலங்களுக்கு 4 மேல்-சபை எம்.பி. பதவி வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., த.மா.கா., தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய தமிழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, மனித உரிமை காக்கும் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன.

தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம். சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகளின்படி பா.ஜனதா கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மீண்டும் நரேந்திர மோடி பிரதமராவதற்கு மக்கள் விரும்புகிறார்கள். மோடி வலிமையான, உறுதிமிக்க தலைவர். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக வளர்ச்சியின் பல்வேறு திட்டங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டது.

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கனிமொழி, ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்கள் ஊழல்வாதிகள். இவர்களின் மீது ஊழல் வழக்கு இருப்பு உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி கொள்ளை அடிக்கப்பட்டது. அவர்கள் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டுள்ளனர்.

இங்கு போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனின் வெற்றிக்காக அமைச்சர்கள், அ.தி.மு.க. பிரமுகர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதை நான் பாராட்டுகிறேன். இங்கு மேடையில் இருக்கும் தலைவர்கள் என் இதயத்தில் இடம் பெற்றவர்கள். அவர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைக்கிறேன்.

புலவாமா தாக்குதலின் போது 40 பேர் பலியானார்கள். அதில் 2 பேர் தமிழர்கள். அதை யாரும் மறந்து விடமுடியாது. இதற்கு தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசு பதிலடி கொடுத்தது. தீவிரவாத முகாம்கள் தாக்கப்பட்டன. ஆனால் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுகிறார்கள்.

பாகிஸ்தான் வெடிகுண்டு தாக்குதலுக்கு பழிவாங்க வேண்டுமா, வேண்டாமா? என்று கூட்டத்தை பார்த்து அமித்ஷா கேட்டார். அதற்கு கூட்டத்தில் இருந்தவர்கள் பழிவாங்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அதற்கு அவர் நன்றி என்று கூறினார்.

பின்னர் அமித்ஷா தனது பேச்சை தொடர்ந்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்து வாபஸ் பெறப்படும் என்று கூறி உள்ளது. அதை பா.ஜனதா ஏற்றுக் கொள்ளாது. காஷ்மீர் உரிமைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

தமிழகத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது பட்டியலிட முடியும். கடந்த முறையில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கு ரூ.94 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் பாரதீய ஜனதா அரசு ரூ.5.42 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மீனவர்களின் நலனை பாதுகாக்க தனியாக ஒரு துறை அமைக்கப்பட்டு உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்டவை அமைக்க ரூ.12 ஆயிரம் கோடியும், தேசிய நெடுஞ்சாலை துறைக்கு ரூ.23 ஆயிரம் கோடியும், ரெயில்வே துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டது. அதே போல் அம்ருதா திட்டத்திற்கு ரூ.4 ஆயிரத்து 500 கோடியும், சாகர்மாலா திட்டத்திற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதுபோல் பல்வேறு துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணியின் வலுவான இடத்தில் உள்ளார். மீண்டும் பாரதீய ஜனதா தலைமையில் மத்திய அரசு அமைந்தால் தமிழக வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். கூடுதலாக வளர்ச்சி திட்டங்களும் தொடங்கப்படும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நமது கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதேபோல் தமிழகத்திலும் வருகிற 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நமது கூட்டணி அமோக வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் வலுவான ஆட்சி அமைக்க நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பொதுக்கூட்ட மேடையில் அமித்ஷாவுக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு, வெள்ளிவேல் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் 3.15 மணிக்கு ஹெலிகாப்டரில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story